பெங்களூரு- காரைக்கால் ரெயில் மீண்டும் இயக்கம்
பெங்களூரு- காரைக்கால் ரெயில் மீண்டும் இயக்கப்பட்டதால் ஓசூரில் காங்கிரஸ் கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.
ஓசூர்:-
கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கையாக கடந்த 2 ஆண்டுகளாக ஓசூர் வழியாக செல்லும் பெங்களூரு - காரைக்கால் பாசஞ்சர் ெரயில் இயக்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. இதனால், ஓசூர் பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக ெரயில் பயணிகள், பொதுமக்கள் மற்றும் ஓசூர் ெரயில் பயணிகள் சங்கத்தினர் டாக்டர் செல்லகுமார் எம்.பி.யிடம் மீண்டும் ரெயிலை இயக்க ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர். இந்த ரெயிலை இயக்க செல்லகுமார் எம்.பி. நடவடிக்கை எடுத்தார். அவரது முயற்சியால் நேற்று முதல் பெங்களூரு- காரைக்கால் ரெயில் மீண்டும் ஓட தொடங்கியது.
நேற்று காலை பெங்களூருவில் இருந்து வந்த காரைக்கால் ரெயிலுக்கு, ஓசூர் ரெயில்நிலையத்தில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.ஏ. முரளிதரன் தலைமையில் பூஜைகள் செய்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பின்னர், கட்சியினர் செல்லகுமார் எம்.பி.யை வாழ்த்தி கோஷமிட்டு ரெயிலை வழியனுப்பி வைத்தனர். இதேபோல் மீண்டும் இயக்கப்பட்ட யஷ்வந்த்பூர்- ஓசூர் புஷ்புல் ரெயிலுக்கும், மாலையில் காங்கிரஸ் கட்சியினர் வரவேற்பு அளித்தனர். இதில் மாவட்ட துணைத்தலைவர் கீர்த்தி கணேஷ், பிரபாகரன், மாநகராட்சி கவுன்சிலர் இந்திராணி, மகிளா காங்கிரஸ் தலைவி சரோஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.