குடியரசு தின விழாவில் 81 பேருக்கு ரூ.90 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
நாகையில் நடந்த குடியரசு தின விழாவில் 81 பேருக்கு ரூ.90 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அருண்தம்புராஜ் வழங்கினார்.
நாகையில் நடந்த குடியரசு தின விழாவில் 81 பேருக்கு ரூ.90 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அருண்தம்புராஜ் வழங்கினார்.
74-வது குடியரசு தின விழா
நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று 74-வது குடியரசு தின விழாவில் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் முன்னிலை வகித்தார்.
விழாவில் கலெக்டர் அருண் தம்புராஜ், போலீஸ் துறை, வருவாய்த்துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, சுகாதாரத்துறை, செய்தித்துறை மற்றும் பிற துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 170 பேருக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார்.
நலத்திட்ட உதவிகள்
தொடர்ந்து கலெக்டர் அருண் தம்புராஜ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.52,700 மதிப்பீட்டில் 6 பேருக்கு இணைப்பு மூன்று சக்கர சைக்கிள், மடக்கு சக்கர நாற்காலிகள், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 33 பேருக்கு ரூ.37,500 மதிப்பீட்டில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவிதொகை, மாற்றுத்திறனாளி உதவிதொகைகளை வழங்கினார்.
மேலும் முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் 2 பேருக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பீட்டில் கல்வி உதவித்தொகை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகளின் கீழ் 3 பேருக்கு ரூ.3 ஆயிரம் மதிப்பீட்டிலும், மாவட்ட காசநோய் மையம் சார்பில் 5 பேருக்கு ரூ.5 ஆயிரம் மதிப்பீட்டில் ஊட்டச்சத்து பரிசு பெட்டகம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 5 பேருக்கு ரூ.30 ஆயிரம் மதிப்பீட்டில் இலவச தையல் எந்திரங்கள் வழங்கபபட்டன.
விபத்து நிவாரணம்
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் தமிழ்நாடு மீனவர் நல வாரியம் நிவாரண திட்டத்தின் கீழ் 2 பேருக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் என ரூ.4 லட்சம் மதிப்பிலான விபத்து நிவாரணத்திற்கான ஆணை, வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 4 பேருக்கு ரூ.8 லட்சத்து 68 ஆயிரத்து 798 மதிப்பீட்டில் பவர் டில்லர், நெல் மற்றும் மிளகாய் அரவை எந்திரம், சூரிய சக்தி மின் மோட்டார் உள்ளிட்ட எந்திரங்கள் வழங்கப்பட்டன.
வேளாண்மை துறை சார்பில் 5 பேருக்கு ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்து 349 மதிப்பீட்டில் மின்கல தெளிப்பான், உளுந்து விதை, தார்ப்பாய், ரோட்டர்வேட்டர் போன்றவை வழங்கப்பட்டன. தோட்டக்கலைத்துறை சார்பில் 5 பேருக்கு ரூ.52 ஆயிரம் மதிப்பிலான மிளகாய் மற்றும் சாமந்தி குழித்தட்டு நாற்றுகள், விதைகள், இடுபொருட்களையும் கலெக்டர் வழங்கினார்.
மானியம்
தொடர்ந்து தாட்கோ சார்பில் 7 பேருக்கு ரூ.15 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டில் மானியத்துடன் கூடிய டிராக்டர், நலவாரிய அடையாள அட்டைகளையும், மாவட்ட தொழில் மையம் சார்பில் 4 பேருக்கு ரூ.59 லட்சம் மதிப்பிலான மரச்சாமான்கள் தயாரிப்பு, ஆயில் டேங்கர், ஆடியோ ஒர்க்ஸ் என மொத்தம் 81 பேருக்கு ரூ.90 லட்சத்து 89 ஆயிரத்து 347 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அருண்தம்புராஜ் வழங்கினார்.