பெசன்ட்நகர் வேளாங்கண்ணி ஆலய பொன்விழா கொடி ஏற்றத்துடன் 29-ந்தேதி தொடங்குகிறது
சென்னை பெசன்ட்நகர் வேளாங்கண்ணி ஆலயத்தின் பொன் விழா வருகிற 29-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது.
சென்னை,
சென்னை பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின் பொன் விழா மற்றும் ஆண்டு பெருவிழா வருகிற 29-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கொடி ஏற்றத்துடன் தொடங்கி நடைபெற உள்ளது. அன்றைய தினம் மாலை 5.45 மணியளவில் ஆலயத்தில் மாதா கொடியை சென்னை மயிலை மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைக்கிறார். பின்னர் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் மாலை 5.30 மணிக்கு நவநாள் ஜெபம், சிறப்பு வழிபாடு மற்றும் ஆராதனையை பாதிரியார்கள் நடத்த இருக்கின்றனர். கொடி ஏற்றத்துக்கு பிறகு வரக்கூடிய ஒவ்வொரு நாளும் உழைப்பாளர் விழா, நலம்பெறும் விழா, இளையோர் விழா, பக்தசபை விழா, நற்கருணை பெருவிழா, இறையழைத்தல் தினம், ஆசிரியர்கள் தினம், குடும்ப விழா போன்ற தலைப்புகளில் கொண்டாடப்பட உள்ளது.
தேர்ப்பவனி
வருகிற 7-ந்தேதி (வியாழக்கிழமை) ஆடம்பர தேர்பவனி நடைபெற இருக்கிறது. இந்த தேர்ப்பவனியை சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தொடங்கி வைத்து, சிறப்பு வழிபாட்டையும் நடத்துகிறார். அதற்கு மறுநாள் (8-ந்தேதி) மாதாவின் பிறப்பு பெருவிழாவாக நடக்கிறது. அன்று மாலை 5.30 மணியளவில் மாதாவுக்கு முடிசூட்டு விழாவும், கொடி இறக்க நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
உலக அமைதிக்காகவும், சமத்துவம், சகோதரத்துவத்தை நிலைநாட்டவும், சமய, சமூக நல்லிணக்கத்தை பறைசாற்றவும் இந்த விழாவில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட இருப்பதாகவும், விழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக செய்யப்பட்டு வருவதாகவும் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின் பாதிரியார் வின்சென்ட் சின்னத்துரை நேற்று தெரிவித்தார்.