போதிய விலை கிடைக்காததால் வாடி வதங்கிய வெற்றிலை விவசாயம்


போதிய விலை கிடைக்காததால் வாடி வதங்கிய வெற்றிலை விவசாயம்
x

தொட்டியம் பகுதியில் போதிய விலை கிடைக்காததால் வெற்றிலை விவசாயம் வாடி வதங்கிய நிலையில் உள்ளன. உரிய நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி

தொட்டியம் பகுதியில் போதிய விலை கிடைக்காததால் வெற்றிலை விவசாயம் வாடி வதங்கிய நிலையில் உள்ளன. உரிய நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெற்றிலை

பயிர்களில் பணப்பயிர் என்று அழைக்கப்படும் வெற்றிலை இன்று மக்களின் அன்றாட வாழ்வில் ஒரு முக்கிய பொருளாக இருந்து வருகிறது. எந்த ஒரு நிகழ்ச்சியானாலும் அங்கு வெற்றிலை முதலிடம் பிடித்து வருகிறது. அதேபோல இறை வழிபாட்டிலும் சரி, சித்த மருத்துவத்திலும் சரி முக்கிய பொருளாக விளங்கி வரும் இந்த வெற்றிலைக்கு தற்போது சரியான விடை கிடைக்காமல் அதை பயிரிடும் விவசாயிகள் மிகவும் கவலையில் உள்ளனர்.

திருச்சி மாவட்டம் தொட்டியம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான பாலசமுத்திரம், கார்த்திகைப்பட்டி, திருநாராயணபுரம், அரசலூர், வரதராஜபுரம், கவுத்தரசநல்லூர், சித்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளைக்கொடி, கற்பூரி போன்ற வெற்றிலை ரகங்கள் அதிகம் பயிரிடப்பட்டுள்ளது. இங்கு பயிரிடப்பட்ட வெற்றிலைகள் வெளி மாவட்டங்களுக்கு குறிப்பாக மயிலாடுதுறை, கும்பகோணம், வேலூர் மற்றும் திருச்சி நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

வரவேற்பு

வெற்றிலைக்கு பெயர் போன கும்பகோணத்தில் தொட்டியம் வெற்றிலை என்றால் அதற்கு தனி வரவேற்பு இன்றும் உள்ளது. காரணம் இங்கு விளையக்கூடிய வெற்றிலை காவிரி ஆற்றின் நேரடி பாசனத்தால் வளர்வதால் ஒரு வாரம் ஆனாலும் வாடாமல் வதங்காமல் அப்படியே இருக்கும்.

இப்படி பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இந்த தொட்டியம் பகுதி வெற்றிலைக்கு சரியான விலை கிடைக்காமல் தற்போது விவசாயிகள் வாடி வதங்கி வேதனையில் சிக்கி வருவது வாடிக்கையாகிவிட்டது.

செழிப்பான தொழில்

இதுகுறித்து தொட்டியம் கணேசபுரத்தை சேர்ந்த வெற்றிலை விவசாயி ராஜகோபால் என்பவர் கூறும்போது, சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு தொட்டியம் பகுதியில் மிகவும் செழிப்பான தொழிலாக இருந்து வந்தது. சுமார் 10ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பத்தினர் இந்த வெற்றிலை தொழில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 2003-ம் ஆண்டுக்கு பிறகு தொடர்ந்து ஏற்பட்ட வறட்சி காரணமாக வெற்றிலை விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தியது. வெற்றிலை விவசாயத்திற்கு போதிய தண்ணீர் இல்லாத காரணத்தினாலும் தொடர் நஷ்டம் காரணமாக ஏற்பட்ட கடன் பிரச்சனையால் இத்தொழிலில் ஈடுபட்ட விவசாய குடும்பங்கள் வாழ்வாதாரங்களை தேடி திருப்பூர், ஈரோடு போன்ற வெளி மாவட்டங்களுக்கு குடி பெயர்ந்தனர். தற்போது தண்ணீர் பிரச்சினை ஓரளவுக்கு சீராக கிடைத்து வரும் நிலையில், மீதமுள்ள விவசாயிகள் வெற்றிலை விவசாயத்தை தொடர்ந்து வருகிறோம். இந்த நிலையில் உற்பத்தி செய்யப்பட்ட வெற்றிலைகளை வெளியூர்களுக்கு அனுப்பும் போது உரிய விலை கிடைக்காமல் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். எனவே விலை கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ஆட்கள் பற்றாக்குறை

தொட்டியம் சந்தைப்பேட்டையை சேர்ந்த வெற்றிலை விவசாயி கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, ஒரு ஏக்கரில் வெற்றிலை நடவு செய்து, அதற்கு கிடங்கு வெட்டி கொடிகட்டும் வேலை என ஒரு குழந்தையை பராமரிப்பது போல் தினமும் காலை, மாலை என இரண்டு வேளையும் பராமரித்து வருகிறோம். குப்பை மற்றும் பூச்சிகளில் இருந்து காப்பாற்ற மருந்து அடிக்க, கொடி கட்ட போதிய ஆட்கள் வருவதில்லை. காரணம் இத்தொழிலில் ஈடுபட்டவர்கள் வேறு வேலை தேடிச்சென்ற காரணத்தினால் வெற்றிலை கொடிக்கால் தொழிலுக்கு அதிகம் ஆட்கள் கிடைப்பது சிரமமாக உள்ளது. தற்போது 100 நாட்கள் வேலைக்கு செல்லும் பெண்களை வெற்றிலை தோட்டங்களில் கொடி கட்டுதல், உரம் வைப்பது, களை எடுப்பது போன்ற பணிகளுக்கு அனுப்பி அரசு உதவ வேண்டும் என்றார்.

விலை குறைவு

தொட்டியம் புதுத்தெருவை சேர்ந்த வெற்றிலை வியாபாரி நந்தகுமார் கூறும்போது, இப்பகுதியில் இருந்து முன்பெல்லாம் தினமும் லாரி மற்றும் வேன்களில் 10-க்கு மேற்பட்ட லோடுகள் ஏற்றப்பட்டு மயிலாடுதுறை, கும்பகோணம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. தற்போது வெற்றிலை வரத்து குறைவாக இருப்பதால் ஒரு சில லோடுகளே அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. திருவிழா காலங்கள் மற்றும் பண்டிகை காலங்களில் மட்டுமே குறிப்பிட்ட தொகைக்கு வெற்றிலை விற்று வருகிறது. மற்ற நேரங்களில் வெற்றிலை 110 வெற்றிலை கொண்ட ஒரு கவுளி 30 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை மட்டுமே விற்று வருகிறது. பொங்கல் பண்டிகை காலங்களில் வெற்றிலை வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பொங்கல் பண்டிகையின் போது, ரூ.70 முதல் ரூ.80 வரை விற்க வேண்டிய வெற்றிலை குறைவான விலைக்கு விற்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் வெற்றிலை பயிரிட்ட விவசாயிகள் பெரும் கவலை அடைந்து வருகின்றனர். ஒரு கவலை வெற்றிலை கிள்ளு கூலி போக விவசாயிகளுக்கும் அதை வாங்கி வெளியூர்களுக்கு அனுப்பும் எங்களைப் போன்ற வியாபாரிகளுக்கும் எந்தவித லாபம் இல்லாமல் போகும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது என்றார்.

ஆராய்ச்சி மையம்

தொட்டியம் பழைய சேலம் ரோடு பகுதியை சேர்ந்த வெற்றிலை விவசாயி சண்முகம் கூறும்போது, ஒரு கவுளி வெற்றிலை பறிக்க 7 ரூபாயும், ஏற்றுக்கூலி இறக்கு கூலி செலவு போக விவசாயிக்கு 5 ரூபாய் கிடைப்பதே பெரும் சிரமமாக உள்ளது. வெற்றிலையில் உள்ள மருத்துவ குணங்களை அனைவரும் அறியும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தொட்டியம் பகுதியில் ஒரு வெற்றிலை ஆராய்ச்சி மையத்தை ஏற்படுத்தி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் மட்டுமே இப்பகுதியில் உள்ள வெற்றிலை விவசாயிகள் வாழ்க்கை செழிப்பாக அமையும் என்றார்.


Related Tags :
Next Story