திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தற்கொலை
திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தற்கொலை செய்து கொண்டார்.
சிவகாசி,
திருத்தங்கல் பாண்டியன்நகரை சேர்ந்தவர் ஆறுமுகசாமி. இவரது மனைவி கணேஷ்வரி. கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் உடல்நலம் சரியில்லாமல் இறந்துவிட்டார். ஆறுமுகசாமி, கணேஷ்வரி தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள். இதில் மூத்த மகள் ஜனனிக்கு திருமணம் ஆகி கணவருடன் வசித்து வருகிறார். 2-வது மகள் முனீஸ்வரி (வயது26) திருத்தங்கலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார். 3-வது மகள் அமுதவள்ளி சிவகாசியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இந்தநிலையில் 2-வது மகள் முனீஸ்வரிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. தாய் இறந்த 3 மாதங்களுக்குள் தனக்கு திருமணம் வேண்டாம் என முனீஸ்வரி கூறி வந்துள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை ஆறுமுகசாமி கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.