போடி-தேனி இடையே 125 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை


போடி-தேனி இடையே  125 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை
x
தினத்தந்தி 10 Dec 2022 12:15 AM IST (Updated: 10 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

போடி-தேனி இடையே, 125 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடந்தது.

தேனி

அகல ரெயில்பாதை

மதுரை-போடி அகல ரெயில்பாதை திட்டப்பணி நடந்து வருகிறது. இதில், தேனி வரை பணிகள் முடிவடைந்ததையொட்டி பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது. தற்போது போடி வரை பெரும்பாலான பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து, கடந்த 2-ந்தேதி ரெயில் என்ஜின் அதிவேக சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது.

போடியில் இருந்து தேனி வரையிலான 15 கி.மீ. தூர தண்டவாள பாதையில் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் ரெயில் என்ஜின் இயக்கப்பட்டது. அப்போது ரெயில் என்ஜின் 9 நிமிடம் 20 நொடிகளில் 15 கி.மீ. தூரத்தை கடந்தது.

இதையடுத்து தேனி-போடி ரெயில் பாதையில் ரெயில் செல்லும் போது அதிர்வுகள் ஏற்படுகிறதா? வேறு ஏதேனும் சிறு குறைபாடுகள் இருக்கிறதா? என்பதை கண்டறிய நவீன ஆய்வு ரெயில் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது.

இந்த சோதனை முடிவுகளை ரெயில் பெட்டியில் உள்ள கணினி உடனுக்குடன் பதிவு செய்து வெளியிடும். இதற்காக நவீன ஆய்வு ரெயில் போடிக்கு வந்தது.

சோதனை ஓட்டம்

இதைத்தொடர்ந்து மதியம் 12¼ மணி அளவில் போடியில் இருந்து ரெயில் சோதனை ஓட்டம் தொடங்கியது. இங்கிருந்து 125 கிலோ மீட்டர் வேகத்தில் தேனி நோக்கி ரெயில் புறப்பட்டு சென்றது. சுமார் 8 நிமிடத்தில் அந்த ரெயில் தேனியை சென்றடைந்தது. இந்த சோதனை ஓட்டத்தை ரெயில்வே முதன்மை தலைமை பொறியாளர் இளம்பரனார், துணை தலைமை பொறியாளர் சூரிய மூர்த்தி, செயற்பொறியாளர் சரவணன் ஆகியோர் கண்காணித்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், இது இறுதி கட்ட சோதனையாகும். அதன்பிறகு தெற்கு ரெயில்வே முதன்மை பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்வார். இதையடுத்து ரெயில் இயக்கப்படும் என்றனர்.


Related Tags :
Next Story