இணையதள குற்றத்தில் ஈடுபடுவோரிடமிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
இணையதள குற்றங்களில் ஈடுபடுவோர்களிடமிருந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென மாவட்ட சைபர்கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
விழுப்புரம்:
மாவட்ட சைபர்கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் இணையதள குற்றப்பிரிவு (சைபர் கிரைம்) போலீஸ் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தினமும் சைபர் கிரைம் குற்றவாளிகளால் பொதுமக்கள், பணத்தை இழந்து வருகின்றனர். உங்கள் நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள் இதில் நிறையபேர் இருக்கலாம்.
எவ்வளவோ விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் குற்றவாளிகள் எப்படியாவது ஏமாற்றி பொதுமக்கள், வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டு சேமித்த மொத்த பணத்தையும் திருடி விடுகின்றனர். 1930 என்ற ஹெல்ப்லைன் எண்ணை தொடர்பு கொண்டு உடனே புகார் செய்தால் இழந்தை பணத்தை மீட்கலாம் என்ற விவரம் பலருக்கு தெரிவதில்லை. தாமதமாக புகார் அளித்தால் பணத்தை மீட்பது கடினம். அறிமுகம் இல்லாத யாராவது ஒருவர், செல்போனில் தொடர்புகொண்டு பேசினால் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.
பொதுமக்களுக்கு அறிவுரை
மக்களின் விழிப்புணர்வுக்காக இந்திய அரசு, cybersafe.gov.in என்ற வலைதளத்தில் இதுவரை பதிவான குற்றவாளிகளின் செல்போன் எண், வங்கி கணக்கு எண், UPI முகவரி ஆகியவை சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
எனவே உங்களை தொடர்பு கொண்டவரின் செல்போன் எண், வங்கி கணக்கு எண், UPI முகவரி ஆகியவற்றை cybersafe.gov.in என்ற வலைதளத்தில் ஒருமுறை சோதித்து பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். குற்றங்கள் பற்றி புகார் அளிக்க சப்-இன்ஸ்பெக்டர் 94982 02106 மற்றும் www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிவிக்கலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.