பகவதி அம்மன் கோவில் பங்குனி திருவிழா: தீக்குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்
பாண்டிபாளையம் பகவதி அம்மன் கோவில் பங்குனி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி தீக்குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பங்குனி திருவிழா
கரூர் மாவட்டம், புன்னம் சத்திரம் அருகே பாண்டிபாளையத்தில் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 9-ந்தேதி பூச்சூட்டுதல், வடி சோறு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 10-ந்தேதி திரளான பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்தக் குடங்களில் புனிதநீர் எடுத்து கொண்டு மேள தாளங்கள் முழங்க கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.
பின்னர் மாலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் மாலை கோவிலில் தயாராக இருந்த தீக்குண்டத்தில் திரளான பக்தர்கள் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
கிடாவெட்டு பூஜை
தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. பெண்கள் பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்து வந்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இரவு வாண வேடிக்கை நடைபெற்றது.
நேற்று காலை கிடா வெட்டு பூஜையும், மதியம் மஞ்சள் நீராடலுடன் திருவிழா நிறைவு பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.