பக்தோசித பெருமாள் பெரிய மலைக்கு எழுந்தருளினார்
பவித்ர உற்சவத்தை முன்னிட்டு பக்தோசித பெருமாள் பெரிய மலைக்கு எழுந்தருளினார்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் கொண்டபாளையத்தில் அமைந்துள்ள பெரியமலை யோக லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆண்டு தோறும் 7 நாள் பவித்ர உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் யோக லட்சுமி நரசிம்மர் கோவிலில் நடைபெற உள்ள பவித்ர உற்சவத்தை முன்னிட்டு ஊர் கோவிலான லட்சுமி நரசிம்மர் கோவிலில் பக்தோசித பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து உற்சவர் பக்தோசித பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெரியமலை கோவிலுக்கு எழுந்தருளினார். மூலவர் யோக நரசிம்மர் சன்னதில் உற்சவர் பக்தோசித பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது யாக பூஜை செய்து, பவித்ர மாலை அணிவித்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று முதல் 7 நாட்கள் நடைபெறும் பவித்ர உற்சவத்தில் தினமும் இரு வேளைகளும் சிறப்பு பூஜை நடைபெறும். இதற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.