கொரோனா பரவாமல் இருக்க வேண்டி பரத்வாஜ் சுவாமிகள் அக்னி துர்கா யோக நிஷ்டை தியானம்
கொரோனா பரவாமல் இருக்க வேண்டி பரத்வாஜ் சுவாமிகள் அக்னி துர்கா யோக நிஷ்டை தியானத்தில் ஈடுபட்டார்
சென்னை, அம்பத்தூர் புவனேஸ்வரி பீடத்தை சேர்ந்தவர் ஸ்ரீ ஜெகத்குரு பரமஹம்ச பரத்வாஜ் சுவாமிகள். இவர் நாடு நலம்பெற வேண்டியும், கொடிய நோய்கள் நாட்டு மக்களை தாக்காமல் இருக்க வேண்டியும் இந்தியா முழுவதும் பயணம் செய்து கங்கை, யமுனை, காவிரி, நர்மதை, கோதாவரி உள்ளிட்ட பல்வேறு நதிகளில் சிறப்பு பூஜைகள் மற்றும் தியானங்கள் செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக திருச்சிக்கு நேற்று வந்த அவர் காவிரி ஆறு, அம்மா மண்டபம் படித்துறை பகுதியில் ஸ்ரீ அக்னி துர்கா யோக நிஷ்டை தியானத்தில் ஈடுபட்டார். சுட்டெரிக்கும் வெயிலில் அவர் 2 மணி நேரம் அமர்ந்து இந்த தியானத்தில் ஈடுபட்டார். கொரோனா தொற்று பரவாமல் இருக்க வேண்டியும், வெயிலின் தாக்கத்தால் அம்மை உள்ளிட்ட நோய்கள் பரவாமல் இருக்க வேண்டியும், நல்ல மழை பெய்ய வேண்டியும் இந்த தியானத்தில் பரத்வாஜ் சுவாமிகள் ஈடுபட்டார். தியானத்தில் அமர்ந்திருந்தபோது அந்த வழியாக சென்ற கன்று குட்டி ஒன்று அவர் முன்னால் சென்று படுத்துக் கொண்டது. இதை அங்கிருந்த பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். இது குறித்து பரத்வாஜ் சுவாமிகள் கூறுகையில், `இந்தியாவில் உள்ள நதிகளை 40 ஆண்டு காலமாக தாயாக பூஜித்து தூய்மை பணியில் ஈடுபட்டு வருவதற்காக பிரதமர் நரேந்திர மோடியிடமும், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமிடமும் ஏற்கனவே பாராட்டுதலை பெற்றுள்ளேன். பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளை தூய்மையாக வைத்துக் கொள்ளவேண்டும்' என்றார்.