பாளையங்கோட்டையில் பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பாளையங்கோட்டையில்  பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத தமிழக அரசை கண்டித்து பாளையங்கோட்டையில் பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்

திருநெல்வேலி

பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத தமிழக அரசை கண்டித்து பாளையங்கோட்டையில் பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத தி.மு.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நேற்று பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாளையங்கோட்டை ஜோதிபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தயா சங்கர் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர்கள் சுரேஷ், வேல் ஆறுமுகம், முத்துபலவேசம், மண்டல தலைவர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

பா.ஜனதா கூட்டத்தின்போது போலீசாரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது எங்கள் தொண்டர்களின் கூட்டம் அதிகமாக இருக்கிறது.

தமிழகத்தை 2-ஆக பிரிக்க...

தி.மு.க. எம்.பி. ராசா மட்டும்தான் தனி நாடு கேட்பாரா? நாங்களும் கேட்போம். தமிழகத்தை எங்களுக்கு இரண்டாக பிரித்துக் கொடுங்கள். பாண்டியநாடு, பல்லவ நாடு என்று இரண்டாக பிரித்துக் கொடுங்கள்.

தமிழகத்தை இரண்டு மாநிலங்களாக பிரித்தால் நல்லது என்பது எனது ஆசை. நிர்வாக காரணங்களுக்காக இரண்டாக பிரிக்கலாம். அதன் மூலம் அதிக அளவு நிதியை பெற முடியும். மாநிலங்களும் வளர்ச்சியை நோக்கி செல்லும்.

ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவை பிரித்தது போல் தமிழகத்தையும் 2 மாநிலங்களாக பிரிக்க வேண்டும். அதில் பா.ஜனதா முதல்-அமைச்சராக இருந்தாலும் சரி, கூட்டணி கட்சி முதல்-அமைச்சர் பதவியில் அமர்ந்தாலும் சரி.

தற்போது அ.தி.மு.க.வில் நிலவும் பிரச்சினையில் நாங்கள் நடுநிலையாக உள்ளோம். மோடியின் 8 ஆண்டு ஆட்சியில் ஊழலை பார்க்க முடியாது. ஜி.எஸ்.டி. தொடர்பாக தமிழகத்திற்கு ஒரு பைசா கூட மத்திய அரசு செலுத்த வேண்டியது இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து ெகாண்டவர்கள்

ஆர்ப்பாட்டத்தில் மாநில இளைஞரணி துணைத்தலைவர் நயினார் பாலாஜி, செயற்குழு உறுப்பினர் மகாராஜன், மகளிர் அணி துணைத்தலைவி கனிஅமுதா, செயலாளர் தீபா, வக்கீல் பிரிவு செயலாளர் சிவசூரியநாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story