வாரணாசியில் பாரதியார் இல்லம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலியில் திறந்துவைத்தார்
வாரணாசியில் தமிழக அரசு சார்பில் ரூ.18 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட பாரதியார் இல்லத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலியில் நேற்று திறந்து வைத்தார்.
சென்னை,
மகாகவி பாரதியாரின் 141-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
பாரதியார்
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் 11-12-1882 அன்று பாரதியார் பிறந்தார். தாய்நாட்டின் விடுதலைக்கு உணர்ச்சிமிக்க பல பாடல்களை இயற்றினார்.
17 ஆண்டுகளாக சுதேசமித்ரன், இந்திய சக்கரவர்த்தினி, பாலபாரதம் போன்ற பல பத்திரிகைகள் வாயிலாக சிறந்த கட்டுரைகளையும், கவிதைகளையும் எழுதி, நாட்டு மக்களின் உள்ளங்களில் சுதந்திர தாகத்தை வளர்த்த பெருமைக்குரியவர். பெண் விடுதலை குறித்து அவர் எழுதிய பாடல்கள் வரலாற்றில் நிலைத்து நிற்பவை. தாய்மொழி தமிழை தெய்வமாக போற்றியவர் பாரதியார்.
ரூ.18 லட்சத்தில் புதுப்பிப்பு
அன்னாரது புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பாரதியார் மறைந்த நூற்றாண்டின் நினைவாக 10-9-2021 அன்று பாரதியின் நினைவு நாள் "மகாகவி நாள்" ஆக கடைப்பிடிக்கப்படும், "பாரதி இளங்கவிஞர் விருது" வழங்கப்படும், வாரணாசியில் அவர் வாழ்ந்த வீடு புதுப்பிக்கப்பட்டு நினைவு இல்லமாக மாற்றப்படும் உள்ளிட்ட 14 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதன் அடிப்படையில் உத்தரபிரதேச மாநிலம்,வாரணாசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு, வீட்டின் உரிமையாளருடன் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு வீட்டின் ஒரு பகுதி ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு, அதில் பாரதியாரின் மார்பளவு சிலை நிறுவப்பட்டு உள்ளது. நினைவு இல்லத்தில் பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் புகைப்படங்களும், வாழ்க்கை குறிப்பும், அவரது படைப்புகளும், சிறு நூலகமும் அமைக்கப்பட்டு உள்ளது.
முதல்-அமைச்சர் திறந்துவைத்தார்
தமிழக அரசின் சார்பில் புதுப்பிக்கப்பட்டுள்ள பாரதியார் வாழ்ந்த நினைவு இல்லத்தையும், அதில் அமைக்கப்பட்டுள்ள பாரதியாரின் மார்பளவு சிலையையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வழியாக நேற்று திறந்துவைத்தார்.
மேலும், பாரதியார் குறித்த குறும்படத்தை முதல்-அமைச்சர் பார்வையிட்டு, செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்பு மலரையும் வெளியிட்டார். அதை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெற்றுக்கொண்டார்.
பங்கேற்றவர்கள்
இந்த நிகழ்ச்சியில் தலைமைச்செயலகத்தில் இருந்தபடி செய்தி மக்கள் தொடர்பு இயக்குநர் வீ.ப.ஜெயசீலனும், காணொலி காட்சி வழியாக உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் இரா.செல்வராஜ், வாரணாசி கூடுதல் கலெக்டர் குலாப் சந்திரா, பாரதியாரின் தங்கை மகன் கேதார வெங்கட கிருஷ்ணன், தங்கை மகனின் மகன் ரவிக்குமார், மகள்கள் ஆனந்த சீனிவாசன், ஜெயந்தி முரளி, கூடுதல் இயக்குநர் (மக்கள் தொடர்பு) மு.பா.அன்புச்சோழன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.