பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
நீர்வரத்து குறைந்தது
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை மற்றும் தமிழ்நாட்டில் 2-வது பெரிய அணை என்ற பெருமை கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது. அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
இந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்து வருவதால் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. மேலும் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படுவதால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 101.99 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 113 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் காலிங்கராயன் பாசன பகுதிக்கு வினாடிக்கு 500 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.
நேற்று மாலை 4 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 577 கனஅடி தண்ணீர் வந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 101.84 அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் காலிங்கராயன் பாசன பகுதிக்கு வினாடிக்கு 500 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.