பந்தல் அமைத்து பீர்க்கங்காய் சாகுபடி


பந்தல் அமைத்து பீர்க்கங்காய் சாகுபடி
x

பந்தல் அமைத்து பீர்க்கங்காய் சாகுபடி

திருப்பூர்

போடிப்பட்டி

மடத்துக்குளம் பகுதியில் தற்காலிக பந்தல் அமைத்து பீர்க்கங்காய் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் நல்ல விலை கிடைப்பதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பந்தல் காய்கறிகள்

மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காய்கறிகள் சாகுபடியில் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் தக்காளி உள்ளிட்ட பல காய்கறிகள் தொடர்ச்சியாக விலை சரிவை சந்தித்து விவசாயிகளை நஷ்டத்தில் தள்ளியது. இதனால் மாற்றுப் பயிர்கள் தேடும் விவசாயிகளுக்கு பந்தல் காய்கறிகள் சிறந்த தேர்வாக உள்ளது.

அதேநேரத்தில் கல் தூண்கள் மற்றும் கம்பிகளைக் கொண்டு நிரந்தர பந்தல் அமைப்பதற்கு அதிகம் செலவு பிடிக்கும் நிலையில் தற்காலிக பந்தல் அமைத்து பல விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். அந்தவகையில் மடத்துக்குளம் பகுதியில் தற்காலிக பந்தலில் பீர்க்கங்காய் சாகுபடி செய்துள்ள நிலையில் தற்போது நல்ல விலை கிடைத்து வருவதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

எடை குறைப்பு

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது-

பொதுவாக பந்தல் காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. ரத்தத்தை சுத்திகரிப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும் தன்மை பீர்க்கங்காய்க்கு உள்ளது.எடைக் குறைப்புக்கு உதவும் காய் என்பதுடன் உடல் குளிர்ச்சியையும் தரக்கூடியது என்பதால் பீர்க்கங்காய்க்கு எப்போதுமே மவுசு உண்டு.தற்போது ஒரு கிலோ பீர்க்கங்காய் சில்லறை விற்பனையில் ரூ.60 வரை விற்பனையாகிறது. இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயமாக உள்ளது.பீர்க்கங்காய் சாகுபடியைப் பொறுத்தவரை ஏக்கருக்கு 600 கிராம் முதல் 800 கிராம் வரை விதைகள் தேவைப்படும். விதை ஊன்றிய 50 முதல் 60 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடும்.பின்னர் ஒரு வார இடைவெளியில் அறுவடை மேற்கொள்ளலாம். ஏக்கருக்கு 6 டன் முதல் 8 டன் வரை மகசூல் கிடைக்கும். பல லட்சங்கள் செலவு செய்து நிரந்தர பந்தல் அமைத்து பந்தல் சாகுபடி செய்வதற்கு இணையாக குறைந்த செலவிலான தற்காலிக பந்தல் மூலமும் மகசூல் ஈட்ட முடியும். மேலும் முழுமையாக ஒரே பயிரை சாகுபடி செய்வதற்குப் பதிலாக புடலை, பாகல் போன்றவற்றை ஊடுபயிராக சாகுபடி செய்வதன் மூலம் கூடுதல் வருவாய் பெறும் வாய்ப்புகளை உருவாக்கிக்கிக் கொள்ளலாம்.இவ்வாறு விவசாயிகள் கூறினர்.


Next Story