ரூ.30½ கோடியில் பல்வேறு திட்டங்களுக்கு பூமிபூஜை
கொடைக்கானல் நகராட்சியில் ரூ.30½ கோடியில் பல்வேறு திட்டங்களுக்கு பூமி பூஜை நடந்தது.
கொடைக்கானல் நகராட்சி சார்பில் நட்சத்திர ஏரியை சீரமைப்பது உள்பட ரூ.30 கோடியே 56 லட்சத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. அதில் ரூ.24 கோடியில் ஏரியில் சுத்திகரிப்பு நீரூற்று, புதிய படகு குழாம், புதிய படகுகள், பூங்காக்கள் அமைத்தல், 40 ஆயிரம் மலர் செடிகள் நடுதல், நடைபாதை சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெறுகிறது. அண்ணா சாலையில் உள்ள காய்கறி அங்காடி கட்டிடம் அகற்றப்பட்டு, புதிதாக ரூ.3 கோடியே 56 லட்சத்தில் கட்டிடம் கட்டப்படுகிறது. அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர்கள் தங்குவதற்கு ரூ.1 கோடியே 60 லட்சத்தில் புதிய விடுதி கட்டிடம், ரூ.1 கோடியே 30 லட்சத்தில் ஆடு வதை கூடம் ஆகியவை கட்டப்படுகிறது.
இந்த பணிகளுக்கான பூமி பூஜை, கொடைக்கானல் நகராட்சி அலுவலகம் எதிரே நடைபெற்றது. இதற்கு நகராட்சி ஆணையாளர் நாராயணன் தலைமை தாங்கினார். என்ஜினீயர் முத்துக்குமார் வரவேற்றார். நகராட்சி தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன் ஆகியோர் ரூ.30 கோடியே 56 லட்சத்தில் நடைபெறும் பணிகளை தொடங்கி வைத்தனர். இந்தநிகழ்ச்சியில் நகர்நல அலுவலர் டாக்டர் அரவிந்த், சுகாதார ஆய்வாளர் சுப்பையா, இளநிலை என்ஜினீயர் செல்லத்துரை, முன்னாள் நகராட்சி தலைவர் முகமது இப்ராஹிம், இளநிலை உதவியாளர் வாசுதேவன், ஒப்பந்தகாரர் ஈஸ்வரி முருகன் மற்றும் கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் கூறுகையில், நட்சத்திர ஏரியில் நடைபெற்று வரும் பணிகள் அடுத்த சீசன் தொடங்குவதற்கு முன்பே நிறைவடையும். அதன் பின்பு நட்சத்திர ஏரி புதுப்பொலிவுடன் காணப்படும் என்றார்.