அரசு கல்லூரி கட்டிடம் கட்ட பூமிபூஜை
திருச்சுழி அருகே அரசு கல்லூரி கட்டிடம் கட்ட பூமி பூஜை செய்து அமைச்சர் தங்கம் தென்னரசு பணிகளை தொடங்கி வைத்தார்.
திருச்சுழி,
திருச்சுழி அருகே அரசு கல்லூரி கட்டிடம் கட்ட பூமி பூஜை செய்து அமைச்சர் தங்கம் தென்னரசு பணிகளை தொடங்கி வைத்தார்.
கலை கல்லூரி
திருச்சுழி அருகே மேலேந்தல் கிராமத்தில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடம் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார். அமைச்சர் தங்கம் தென்னரசு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி தரைத்தளம், முதல்தளம், இரண்டாம் தளம் என 3 தளங்களுடன் அமைய உள்ளது. தரைத்தளத்தில் நிர்வாக அலுவலகம், மூன்று வகுப்பறைகள், நூலகம், நூலக அலுவலக அறை, இரண்டு ஆசிரியர்கள் அறை, 2 துறைத்தலைவர்கள் அறை மற்றும் மாணவ, மாணவிகளுக்கான கழிவறைகள் அமைய உள்ளன.
ஏழை மாணவர்கள் பயன்
முதல் தளத்தில் 6 வகுப்பறைகள், 2 ஆய்வகங்கள், ஒரு கருத்தரங்கம், 2 துறை தலைவர்கள் அறை மற்றும் மாணவ, மாணவிகளுக்கான கழிவறை வசதிகளும், 2-வது தளத்தில் 6 வகுப்பறைகள், உடற்கல்வி ஆசிரியர் அறை, ஒரு ஆசிரியர் அறை, மாணவ, மாணவிகளுக்கான கழிவறை வசதிகளும் அமைக்கப்பட உள்ளது.
இங்கு புதிய கலை மற்றும் அரசு கல்லூரி அமைவதால், உயர்கல்விக்கு செல்லும் இப்பகுதி கிராமங்களை சேர்ந்த ஏழை, எளிய மாணவ, மாணவிகள் பயன்பெறுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கல்யாணகுமார், திருச்சுழி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பொன்னுசாமி, மாவட்ட கவுன்சிலர்கள் போஸ், கமலி பாரதி தங்க தமிழ்வாணன், கல்லூரி முதல்வர் மணிமாறன், காரியாபட்டி பேரூராட்சி தலைவர் செந்தில், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.