ரூ.56 லட்சத்தில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட பூமிபூஜை
மயிலாடுதுறையில் ரூ.56 லட்சத்தில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணிகளுக்கான பூமிபூஜையை தருமபுரம் ஆதீனம், ராமலிங்கம் எம்.பி தொடங்கி வைத்தனர்.
மயிலாடுதுறையில் ரூ.56 லட்சத்தில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணிகளுக்கான பூமிபூஜையை தருமபுரம் ஆதீனம், ராமலிங்கம் எம்.பி தொடங்கி வைத்தனர்.
கொள்ளிடம் கூட்டுக்குடிநீர்
மயிலாடுதுறை நகரின் 20 மற்றும் 21- வது வார்டு பகுதிகளான கொத்தத்தெரு, நாஞ்சில் நாடு, பர்மா காலனி, மூங்கில்தோட்டம் மாந்தோப்புத்தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்ட குடிநீர் சரிவர செல்வதில்லை என்று குற்றஞ்சாட்டி அப்பகுதி பொதுமக்கள் பலமுறை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் காரணமாக நகராட்சி சார்பில் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கம் தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.56 லட்சம் மதிப்பீட்டில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட நிதி ஒதுக்கீடு செய்தார். தொடர்ந்து அதற்கான இடம் தருமபுர ஆதீனம் கலைக் கல்லூரி வளாகத்தில் தேர்வு செய்யப்பட்டு கட்டுமான பணி தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது.
கட்டுமான பணி
நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கினார். இதில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள், மாவட்ட கலெக்டர், ராமலிங்கம் எம்.பி., ஆகியோர் செங்கற்கள் எடுத்து வைத்து கட்டுமான பணியை தொடங்கி வைத்தனர். இதன்மூலம், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களின் குடிநீர் தேவை முழுமையாக நிவர்த்தி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதில் மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) லட்சுமணன், மயிலாடுதுறை நகரசபை தலைவர் செல்வராஜ், துணைத் தலைவர் சிவக்குமார் மற்றும் நகரசபை உறுப்பினர்கள், கலந்து கொண்டனர்.