கூடலூரில் மாணவர்களுக்கான சைக்கிள் போட்டி


தினத்தந்தி 16 Sept 2022 12:15 AM IST (Updated: 16 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை சார்பில் கூடலூரில் மாணவர்களுக்கு சைக்கிள் பந்தய போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நீலகிரி

கூடலூர்

மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை சார்பில் கூடலூரில் மாணவர்களுக்கு சைக்கிள் பந்தய போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மாணவர்களுக்கு சைக்கிள் போட்டிகள்

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி நீலகிரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை சார்பில் கூடலூர் மார்தோமா நகரில் பள்ளிக்கூட மாணவ- மாணவிகளுக்கான சைக்கிள் பந்தய போட்டிகள் நேற்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. 13, 15, 17 வயதுக்குட்பட்ட மாணவ மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டது.

தமிழக வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் சா.ப. அம்ரித் முன்னிலை வகித்தார். அமைச்சர் கா.ராமச்சந்திரன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

முன்னாள் முதல்- அமைச்சர் அண்ணா பிறந்த நாளையொட்டி மாவட்டம் முழுவதும் மாணவர்களுக்கு சைக்கிள் பந்தயப் போட்டிகள் நடத்த ரூ.1 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் முதலிடம் ரூ.5 ஆயிரமும், 2-ம் இடத்துக்கு ரூ.3 ஆயிரமும், 3-ம் இடத்துக்கு ரூ.2 ஆயிரம் தலா வழங்கப்படும். 4 - தொடங்கி 10 -ம் இடங்கள் வரை பிடிக்கும் மாணவ- மாணவிகளுக்கு தலா ரூ.250 வழங்கப்படும். சமுதாயத்தில் சமத்துவம் சமதர்மத்தை அண்ணா ஏற்படுத்தினார். இவ்வாறு அவர் கூறினார்.

பரிசுத்தொகை- சான்றிதழ்

முன்னதாக மார்தோமா நகரில் இருந்து தொரப்பள்ளி வரை மாணவ- மாணவிகளின் சைக்கிள் பந்தய போட்டிகள் நடைபெற்றது. பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு தொகையும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. முன்னதாக சைக்கிள் பந்தய போட்டியையொட்டி முன்எச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்புலன்ஸ், மருத்துவக் குழுவினர் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டனர்.

நிகழ்ச்சியில் ஆர்டிஓ சரவண கண்ணன், நகராட்சி ஆணையாளர் பிரான்சிஸ் சேவியர், தாசில்தார் சித்தராஜ், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அலுவலர் தினேஷ் குமார், கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா, முன்னாள் எம்எல்ஏ திராவிட மணி ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக கூடலூர் நகராட்சிக்குட்பட்ட நடுகூடலூரில் தொடர் கன மழையால் நிலம் மற்றும் வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டது. இதில் 9 வீடுகளில் குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு மாற்றிடம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட இடங்களை வனத்துறை அமைச்சர் பார்வையிட்டார்.


Next Story