இருப்புபிடாரி அரசி அம்மன் கோவில் செடல் திருவிழாஏராளமான பக்தர்கள் தரிசனம்
இருப்பு பிடாரி அம்மன் கோவில் செடல் திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கம்மாபுரம்,
செடல் திருவிழா
கம்மாபுரம் அருகே இருப்பு கிராமத்தில் பிரசித்தி பெற்ற பிடாரி அரசி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் செடல் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான செடல் திருவிழா கடந்த மாதம் 27-ந்தேதி காப்பு கட்டி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் இரவு அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
தேரோட்டம்
இதனையடுத்து விழாவின் சிகர நிகழ்ச்சியான செடல் மற்றும் தேர் திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை முதலே பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், கோவிலை வலம் வந்து நேர்த்திக்கடனை நிறைவேற்றிக்கொண்டனர்.
தொடர்ந்து மாலை அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து கோவில் முன்பு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அம்மன் எழுந்தருளினார். அதன்பிறகு அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரானது கோவிலை சுற்றி வலம் கொண்டு வரப்பட்டது. இந்த விழாவில் இருப்பு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், கிராம மக்களும் செய்திருந்தனர். திருவிழாவின்போது ஊ.மங்கலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.