சாராயம் விற்பனை செய்ய ரூ.60 ஆயிரத்துக்கு ஏலம்


சாராயம் விற்பனை செய்ய ரூ.60 ஆயிரத்துக்கு ஏலம்
x

சங்கராபுரம் அருகே சாராயம் விற்பனை செய்ய ரூ.60 ஆயிரத்துக்கு ஏலம் விடப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை மிகவும் அடர்ந்த வனப்பகுதியாகும். இதனை பயன்படுத்தி சமூக விரோதிகள் சிலர் தடையை மீறி சாராயம் காய்ச்சி, கடத்தி சென்று விற்பனை செய்து வருகின்றனர். மேலும் பல கிராமங்களில் சாராயம் விற்பனை செய்வதற்கு ஏலமும் விடப்படுகிறது. இதில் அதிக தொகைக்கு ஏலம் எடுப்பவர்கள் மட்டும் குறிப்பிட்ட கிராமங்களில் சாராயம் விற்பனை செய்ய முடியும். இதை தடுக்க போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும் பலனில்லை.

இந்த நிலையில் சங்கராபுரம் அருகே பாப்பாத்தி மூலை கிராம பகுதியில் சாராயம் விற்பனை செய்வதற்கு ஏலம் விடப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

ரூ.60 ஆயிரத்துக்கு ஏலம்

இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவின் பேரில் சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார் பாப்பாத்தி மூலை பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு அதே ஊரைச்சேர்ந்த பாக்கியராஜ் (வயது 28), ராமர், தனபால், மாணிக்கம் ஆகியோர் சாராயம் விற்பனை செய்வதற்கு ஏலம் விட்டுள்ளனர்.

இதில் அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன்(42) என்பவர் கலந்து கொண்டு சாராயம் விற்பனை செய்ய ரூ.60 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து சாராயம் விற்பனை செய்ய ஏலம் விட்டது தொடர்பாக வெங்கடேசன், பாக்கியராஜ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரம் ரொக்கம், 120 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பிஓடிய ராமர், தனபால், மாணிக்கம் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story