பறவைகள் கணக்கெடுக்கும் பணி
உடுமலை அருகே பெரியகுளத்தில் பொங்கல் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.
பெரிய குளத்தில் பறவைகள்
சுறுசுறுப்பு, தியாகம், சுதந்திரத்திற்கு பெயர் போனவை பறவைகள். சூரிய உதயத்திற்கு முன்பு விழித்தெழுந்து இறை தேடலில் ஆரம்பித்து இரவில் இருப்பிடத்தை அடையும் வரையிலான அதன் வாழ்க்கை இயற்கையை பாதுகாத்து உழவுத்தொழிலுக்கு நன்மை புரிவதில் முடிவடைந்து விடுகிறது. இயற்கை காவலர்களான பறவைகளின் பங்கு இல்லாமல் நாளும் பொழுதும் ஆரோக்கியமாக கடந்து செல்லாது என்பதே உண்மையாகும்.
இதனால் பறவைகளை பாதுகாக்கும் வகையில் கணக்கெடுப்பை நடத்தி அதன் எண்ணிக்கையை தக்க வைப்பதில் அரசும் தனியார் அமைப்புகளும் தீவிரமாக முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில் உடுமலையை அடுத்த பெரியகுளத்தில் பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. பசுமை மாறா இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை, ஈகை குழுவினர் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.
பாதுகாப்பு நடவடிக்கைகள்
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
பறவைகள் கணக்கெடுப்பின் மூலம் ஆண்டுதோறும் குறிப்பிட்ட கால நிலைகளில் காணப்படும் பறவைகள், புதிதாக இடம் பெயர்ந்து வந்த பறவைகள், இரை பற்றாக்குறையால் இடம் பெயர்ந்து சென்ற பறவைகள் போன்ற பல்வேறு விவரங்கள் தெரியவரும்.
இதன் மூலம் குறிப்பிட்ட பகுதி நீர்நிலைகளின் பல்லுயிர் சூழலின் தன்மையை அறியவும் பறவைகள், பூச்சி இனங்கள், ஊர்வன போன்ற பல்லுயிர் சூழலை பாதுகாத்திட தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள இயலும்.
45 வகையான பறவைகள்
அந்த வகையில் பெரிய குளத்தில் நடைபெற்ற கணக்கெடுப்பின்போது நீலத்தாலைக்கோழி, புள்ளி மூக்கு வாத்து, நத்தை, கொத்தி, நாரை, தாமரை இறக்கை இலைக்கோழி, அரிவாள் மூக்கன், செம்முக்கு ஆள்காட்டி, சிறிய நீர்க்காகம், வெள்ளை கொக்கு, பெரிய வெள்ளை கொக்கு, நாரை, நெல் வயல் நெட்டைக்காழி, வெண் மார்பு காணாங்கோழி, முக்குளிப்பான், வெண்மார்பு மீன்கொத்தி, ஊசிவால் வாத்து, தட்டை வாயன், நெடுங்கால் உள்ளான், நீலவால் பஞ்சுருட்டான், வென்கொண்டை சில்லை, செந்நாரை, பனங்காடை, பாம்புத்தாரா, ரெட்டைவால் குருவி, ஊதா தேன்சிட்டு, வால் காக்கை, கருங்கொண்டை நாகவாயம் உள்ளிட்ட 45 வகையான பறவைகள் கணக்கீடு செய்யப்பட்டது.
உடுமலை பகுதியில் உள்ள குளங்களில் தொடர்ந்து கணக்கெடுப்பு பணிகள் தொடர உள்ளோம். இங்குள்ள குளங்களில் உயிர் சூழ்நிலை மையமாக வைத்து இப்பகுதியில் பறவைகள் சரணாலயமாக அறிவித்திட அரசுக்கும் கோரிக்கை விடுக்க உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.