குமுளி மலைப்பாதையில் கோர விபத்து; 100 அடி பள்ளத்தில் கார் பாய்ந்து 7 அய்யப்ப பக்தர்கள் பலி


குமுளி மலைப்பாதையில் கோர விபத்து; 100 அடி பள்ளத்தில் கார் பாய்ந்து 7 அய்யப்ப பக்தர்கள் பலி
x
தினத்தந்தி 24 Dec 2022 2:34 AM IST (Updated: 24 Dec 2022 3:04 AM IST)
t-max-icont-min-icon

குமுளி மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த கார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்ததில் 7 அய்யப்ப பக்தர்கள் பலியானார்கள்.

தேனி

குமுளி மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த கார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்ததில் 7 அய்யப்ப பக்தர்கள் பலியானார்கள்.

இந்த கோர விபத்து குறித்த விவரம் வருமாறு:-

கார் கவிழ்ந்தது

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள சண்முகசுந்தரபுரத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் குழுவினர் சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய சென்றனர். தரிசனம் முடிந்தபிறகு அவர்கள் நேற்று இரவு ஆண்டிப்பட்டி நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர். அந்த காரில் சிறுவன் உள்பட 11 பேர் இருந்தனர். காரை ஆண்டிப்பட்டியை அடுத்த பிச்சம்பட்டியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (வயது40) என்பவர் ஓட்டினார்.

இந்தநிலையில் கார் நேற்று இரவு 11.30 மணி அளவில் குமுளி-லோயர்கேம்ப் மலைப்பாதையில் மாதா கோவில் அருகில் வந்தது. அப்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. ஒருகட்டத்தில் அந்த கார் மலைப்பாதையில் இருந்து 100 அடி பள்ளத்தில் தலைகீழாக பாய்ந்தது. அப்போது அங்குள்ள பெரியாறு அணையில் இருந்து லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்திற்கு செல்லக்கூடிய ராட்சத குழாய்கள் மீது கார் விழுந்து நொறுங்கியது.

7 பேர் பலி

இந்த விபத்தில் காரின் இடிபாடுகளில் சிக்கி, அதில் வந்த அய்யப்ப பக்தர்கள் 7 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் சிறுவன், கார் டிரைவர் உள்பட 4 பேர் படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். அவர்கள் பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்த குமுளி போலீசார் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை முடுக்கிவிட்டனர். அப்போது படுகாயம் அடைந்த சிறுவன், கார் டிரைவர் உள்பட 4 பேரை மீட்டு சிகிச்சைக்காக குமுளியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே சம்பவ இடத்துக்கு தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே மற்றும் போலீசார் அதிகாரிகள் மீட்பு பணிகளை பார்வையிட்டனர்.

சோகம்

மேலும் உயிரிழந்த 7 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டனர். இறந்தவர்கள் விவரம் வருமாறு:-

ஆண்டிப்பட்டியை சேர்ந்த நாகராஜ் (வயது 46), தேவதாஸ் (55), சிவக்குமார் (45), சக்கம்பட்டியை சேர்ந்த முனியாண்டி (55), மறவபட்டியை சேர்ந்த கன்னிசாமி (60), சண்முகசுந்தரபுரத்தை சேர்ந்த வினோத் (43) மற்றும் ஒருவர். 7 பேரை பலிகொண்ட இந்த கோர விபத்து அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story