எலவனூரில் 19 ஆண்டுகளுக்கு பிறகு பெரிய மாலை திருவிழா


எலவனூரில் 19 ஆண்டுகளுக்கு பிறகு பெரிய மாலை திருவிழா
x

சின்னதாராபுரம் அருகே உள்ள எலவனூரில் 19 ஆண்டுகளுக்கு பிறகு பெரிய மாலை திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி வருகிற 1-ந் தேதி எருது ஓட்டம் நிகழ்ச்சி நடக்கிறது.

கரூர்

பெரிய மாலை திருவிழா

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே உள்ள எலவனூரில் வீர கொண்டவன நாயக்கர், மாட்டுக்கார சாமி, வீரபொம்மக்காள், வீரஜக்கம்மாள், வீரசின்னக்கல் சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பெரிய மாலை திருவிழா நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிகழ்ச்சி நடந்தது. தற்போது கடந்த 16-ந் தேதி இரவு அனைத்து பக்தர்களுக்கும் மஞ்சள் முடிப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் பெரிய மாலை திருவிழா தொடங்கியது.

நேற்று காலை கோவிலில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொத்துக்கொம்பு சாமிக்கு 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் உடம்பில் சந்தனம் பூசி, தலையில் உருமால் கட்டியும், கையில் கம்பும் (தடி) அருளுடன் நேருக்கு நேராக கொத்து கொம்பு சாமி இருக்கும் இடத்திற்கு சென்று சிறப்பு பூஜை செய்து சாமி தரிசனம் செய்தனர்.

எருது ஓட்டம் நிகழ்ச்சி

இதையொட்டி கோவிலில் இருந்து நேருக்கு நேராக 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு இடையில் உள்ள தோகை அமைத்தல் (முள்வேலிகள், கம்பி வேலிகள் அனைத்தையும் அகற்றி தடம் அமைத்தல்) நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 30-ந் தேதி அனைத்து சாமிகளுக்கும் சிறப்பு பூஜையும், 1-ந் தேதி எருது ஓட்டம் நிகழ்ச்சியும், 2-ந் தேதி பொங்கல் வைத்து சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்களும், வீரபாண்டிய கட்டபொம்மன் நற்பணி மன்றமும் செய்து வருகின்றனர்.


Next Story