சென்னையில் இருந்து இலங்கை புறப்பட்ட விமானத்தில் பீகார் பயணி திடீர் நெஞ்சுவலியால் சாவு
சென்னையில் இருந்து இலங்கை புறப்பட்ட விமானத்தில் பீகார் பயணி திடீரென நெஞ்சுவலியால் உயிரிழந்தார்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து நேற்று முன் தினம் இரவு 11.45 மணிக்கு இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு 137 பயணிகளுடன் விமானம் புறப்பட தயாராக இருந்தது. விமானம் ஓடுபாதைக்கு செல்ல தயாரான போது பீகார் மாநிலத்தைச் சேர்ந்த திலீப் குமார் சிங் (வயது 47) என்ற பயணிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதைக்கண்ட சக பயணிகள் விமான பணியாளர்களுக்கு தகவல் தெரிவித்தனா். இது பற்றி விமானி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தந்து விமானத்தை இயக்காமல் நிறுத்தி வைத்தார். உடனே மருத்துவ குழுவினர் விமானத்திற்குள் விரைந்து சென்று அவரை விமானத்தை விட்டு கீழே இறங்கி ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராஜூவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பீகார் பயணி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். இதனால் இலங்கை செல்ல வேண்டிய விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக 136 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது.