இரு தரப்பினர் மோதல்; மோட்டார் அறைக்கு தீ வைப்பு
களக்காடு அருகே இரு தரப்பினர் மோதல் ஏற்பட்டு மோட்டார் அறைக்கு தீ வைக்கப்பட்டது.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள கடம்போடுவாழ்வை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது நண்பருடன் மோட்டார்சைக்கிளில் பெட்ரோல் நிரப்பி விட்டு, ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.
கடம்போடுவாழ்வு ரோட்டில் சென்ற போது, மற்றொரு தரப்பை சேர்ந்த சிலர் இருவரையும் வழிமறித்து மோட்டார்சைக்கிளில் ஏன் வேகமாக செல்கிறீர்கள்? என கேட்டுள்ளனர். இதில் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கியுள்ளனர். இந்த மோதலில் அந்த வாலிபரின் மோட்டார்சைக்கிள் அடித்து நொறுக்கப்பட்டது.
இதனை அறிந்த இருதரப்பை சேர்ந்த பொதுமக்களும் தங்களுக்குள் சமாதானமாக பேசி பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தனர். மேலும் இனி யாரும் எந்தவிதமான பிரச்சினைகளிலும் ஈடுபடக் கூடாது என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் 20-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று முன் தினம் இரவில் ஒரு தரப்பினருக்கு சொந்தமான வயலில் உள்ள (பம்பு செட்) மோட்டார் அறைக்கு தீ வைத்தனர். மேலும் அங்கிருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர். தீ வைக்கப்பட்டதில் மோட்டார் அறை முழுவதும் எரிந்து சேதமானது, அத்துடன் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அங்கிருந்த விவசாய கருவிகளை அடித்து நொறுக்கிய கும்பல் அவைகளை அருகில் உள்ள கிணற்றில் வீசினர்.
அதன் பின்னரும் ஆத்திரம் தணியாத கும்பல், வாழை தோட்டத்துக்குள் புகுந்து தண்ணீர் பாய்ச்ச பயன்படும் குழாய்களை வெட்டி சேதப்படுத்தியுள்ளனர். இதுபற்றி களக்காடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த மோதல் சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.