இருதரப்பினர் மோதல்; 3 பேருக்கு அரிவாள் வெட்டு


இருதரப்பினர் மோதல்; 3 பேருக்கு அரிவாள் வெட்டு
x

நெல்லை அருகே இருதரப்பினர் மோதிக் கொண்டதில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

திருநெல்வேலி

நெல்லை அருகே இருதரப்பினர் மோதிக் கொண்டதில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

மோதல்

நெல்லை அருகே வடக்கு தாழையூத்து கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் சரசுராமன் (வயது 34). இவர் தனது லாரியை பண்டாரக்குளம் நாடார் தெருவை சேர்ந்த சின்னதுரை (40) என்பவருக்கு லீசுக்கு கொடுத்தார். சின்னதுரை அந்த லாரியை விற்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரிடம் சரசுராமன் அதற்கான பணத்தை கேட்டு வந்தார். சம்பவத்தன்று சின்னதுரை வீட்டுக்கு சரசுராமன் மற்றும் உறவினர்களான அதே பகுதியை சேர்ந்த சதீஷ் (27), முத்து (27) ஆகியோர் சென்று பணத்தை கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கினர்.

அரிவாள் வெட்டு

இதில் சின்னதுரையின் உறவினர் முத்துகிருஷ்ணன், அவரின் மகள் ஆகியோர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சின்னதுரை வீட்டில் இருந்த அரிவாளால் சரசுராமன், சதீஷ், முத்து ஆகியோரை வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த 3 பேரும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் குறித்து சரசுராமன் கொடுத்த புகாரின் பேரில் தாழையூத்து போலீசார் சின்னதுரை மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அதே போல் முத்துகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் சரசுராமன், சதீஷ், முத்து ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

நெல்லை அடுத்த மானூர் அருகே உள்ள ராமையன்பட்டியை சேர்ந்தவர் சுபா சங்கர் (30). இவர் நண்பர்களுடன் இரவில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த தேவா (26) என்பவர் தெரு விளக்கை அணைத்தார். இதை சுபா சங்கர் தட்டிக் கேட்டதால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அருகில் உள்ளவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பின்னர் தேவா தனது வீட்டின் அருகில் உறவினர்களிடம் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது, அங்கு சுபாசங்கர், அவரது உறவினர் சுத்தமல்லியைச் சோ்ந்த அய்யப்பன் (23) என்பவருடன் வந்து தேவாவை அவதூறாக பேசி திடீரென மறைத்து வைத்திருந்த அரிவாளால் தேவாவை வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுபாசங்கர், அய்யப்பன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் சுபாசங்கர் கொடுத்த புகாரின் பேரில் தேவாவின் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story