கவர்னரிடம் நிலுவையில் மசோதாக்கள் -அண்ணாமலை விளக்கம்
எந்தெந்த மசோதாக்கள் கவர்னரிடம் நிலுவையில் உள்ளன? என்பது குறித்து அண்ணாமலை விளக்கி உள்ளார்.
சென்னை,
சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உருவாக்குவதில் தி.மு.க.வின் பங்கு என்னென்ன என்பதை நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி. பேசியிருக்கிறார்.
உண்மையில் தி.மு.க.வின் பங்கு என்னென்ன என்று பார்ப்போம். சமீபத்தில் புதுக்கோட்டையில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீரில் மலம் கலந்த விவகாரத்தில் இதுவரை தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தி.மு.க. அமைச்சர் ஒருவர் பொது மேடையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம பஞ்சாயத்து பிரதிநிதி ஒருவரை சாதி பெயரைக்கூறி இழிவுபடுத்தியதை கண்டோம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலின கிராம பஞ்சாயத்து பிரதிநிதிகள், சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தின்போது கொடிகளை ஏற்றவிடாமல் தடுப்பது, தி.மு.க. ஆட்சியில் தொடர்கதை ஆகியிருக்கிறது.
நிலுவையில் இருக்கும் மசோதா
20 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க தாமதப்படுத்துவதாக கனிமொழி கூறியிருக்கிறார். ஆனால், 15 மசோதாக்கள்தான் நிலுவையில் உள்ளன.
தமிழக முதல்-அமைச்சர் தன்னைத்தானே பல்கலைக்கழக வேந்தராக நியமித்த 12 மசோதாக்கள், அரசாங்கத்திற்கு தேவையற்ற அதிகாரங்களை வழங்கும் கூட்டுறவு சங்கங்களின் விதிகளில் திருத்தம் தொடர்பான ஒரு மசோதா, எந்தவொரு தனியார் கல்லூரியையும் கையகப்படுத்த விரும்பும் தமிழக அரசாங்கத்தின் விதியை திருத்தும் ஒரு மசோதா, ஆன்லைன் ரம்மியை தடை செய்வது தொடர்பான மசோதா என 15 மசோதாக்கள் மட்டுமே நிலுவையில் உள்ளன.
2 லட்சத்து 17 ஆயிரம் பேருக்கு வேலை
வேலையில்லா திண்டாட்டத்தை பற்றி கனிமொழி குறிப்பிடுகிறார். ஆனால் அவரது கட்சியோ தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு முடிவுகளை வெளியிட முடியாமல் திணறி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக வாக்குறுதி அளித்த தி.மு.க, .அதை மறந்து விட்டது. தமிழக அரசில், இளைஞர்களுக்கு 5½ லட்சம் வேலை வழங்குவதாக தி.மு.க. அளித்த வாக்குறுதி பற்றி எந்த செய்தியும் இல்லை.
பிரதமர் நரேந்திர மோடி, நமது நாட்டின் இளைஞர்களுக்கு மத்திய அரசில் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உறுதி செய்து உள்ளார். ஏற்கனவே 2 லட்சத்து 17 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைக்கான ஆணையை வழங்கி உள்ளார்.
ஏன் இந்த வித்தியாசம்?
சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு என்ற தி.மு.க. எம்.பிக்களின் வழக்கமான திசை திருப்பும் உரைகளை விட்டு விட முடியாது.
தி.மு.க., ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்த காலமான 2006- 2014-ம் ஆண்டு வரையிலான 8 ஆண்டுகளில் சமஸ்கிருதத்திற்கு ரூ.675.36 கோடியும், தமிழுக்கு ரூ.75.05 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. ஏன் இந்த வித்தியாசம் என்பதை தி.மு.க. விளக்க வேண்டும்.
தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு குறைவாக நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக கனிமொழி கூறியிருக்கிறார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு காலத்தில் ஒதுக்கப்பட்டதை 2023-24-ம் நிதியாண்டில், தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு 7 மடங்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் தற்போது 30 ஆயிரத்து 961 கோடி ரூபாய் மதிப்பிலான ரெயில்வே திட்டங்கள் நடந்து வருகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.