தூத்துக்குடி உள்பட 3 மாவட்டங்களில்பறவைகள் கணக்கெடுக்கும் பணி
தூத்துக்குடி உள்பட 3 மாவட்டங்களில்பறவைகள் கணக்கெடுக்கும் பணி வருகிற 27-ந்தேதி தொடங்குகிறது.
தூத்துக்குடி, தென்காசி, நெல்லை மாவட்டங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி வருகிற 27-ந் தேதி தொடங்குகிறது.
பறவைகள் கணக்கெடுப்பு
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணியை மணிமுத்தாறு அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையம், நெல்லை நீர்வளம் அமைப்பு, மாவட்ட அறிவியல் மையம், நெல்லை இயற்கை சங்கம், திருநெல்வேலி மற்றும் முத்துநகர் இயற்கைச் சங்கம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து மேற்கொள்கிறார்கள்.
வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி, அதன் துணையாறுகள் மற்றும் பாசனக்குளங்கள் நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை தென் தமிழகத்தின் நெற்களஞ்சியமாகவும், வாழை உற்பத்தி மையமாகவும் செழிப்புறச் செய்கின்றன. இப்பாசனக் குளங்கள் எண்ணற்ற நீர்வாழ் பறவைகளுக்கு குறிப்பாக குளிர் காலங்களில் வரும் பறவைகளுக்கு புகலிடமாக உள்ளது. இந்த குளங்களில் இதுவரைக்கும் 100-க்கும் அதிகமான பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
விழிப்புணர்வு
நெல்லை மாவட்டத்தில் உள்ள கூந்தன்குளம், நயினார்குளம், கங்கைகொண்டான், சூரங்குடி ஆகிய குளங்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருப்பணிச்செட்டிக்குளம், மூப்பன்பட்டி கண்மாய் ஆகிய குளங்கள் மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள வாகைக்குளம், ராஜகோபாலப்பேரி ஆகிய குளங்கள் பறவைகளின் இனப்பெருக்கத்திற்கு வாய்ப்பளிப்பதை கணக்கெடுப்பின் மூலம் அறியலாம்.
மேலும் இக்கணக்கெடுப்பின் மூலம் பொதுமக்களிடையே குளங்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
பதிவு செய்யவேண்டும்
இந்த பறவைகள் கணக்கெடுக்கும் பணி வருகிற 27-ந்தேதி தொடங்கி 29-ந் தேதி வரை நடக்கிறது. இந்த கணக்கெடுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள பறவை ஆர்வலர்கள் மற்றும் பறவைகள் கணக்கெடுப்பில் ஆர்வமுள்ள நபர்கள் தங்கள் பெயரை https://forms.gle/tiakzJrDjxZnd6Rh6; படிவத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
அல்லது twbc2020@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாகவும் அல்லது தணிகைவேல் 94429 65315 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்ய கடைசி நாள் வருகிற 25-ந் தேதியாகும்.
பயிற்சி
வருகிற 27-ந்தேதி மதியம் 3 மணி அளவில் நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் வைத்து பதிவு செய்த தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். 28, 29 ஆகிய தேதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெறுகிறது.
இந்த தகவலை தாமிரபரணி பறவைகள் கணக்கெடுப்பு ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.