கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 15 நீர் நிலைகளில் கணக்கெடுப்பு பணி: 100 வகையான அரிய பறவைகள் கண்டுபிடிப்பு
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 15 நீர் நிலைகளில் நடந்த கணக்கெடுப்பு பணியின் போது 100 வகையான அரிய பறவைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
கணக்கெடுப்பு பணி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காப்புக்காடுகளுக்கு வெளியில் உள்ள ஈர நிலங்களான ராமநாயக்கன் ஏரி, பாரூர் ஏரி, தளி ஏரி, கெலவரப்பள்ளி அணை, பனை ஏரி உள்ளிட்ட 15 நீர் நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி தலைமையில் உதவி வன பாதுகாவலர் ராஜமாரியப்பன் மேற்பார்வையில், 40-க்கும் மேற்பட்ட வன அலுவலர்கள், வன பணியாளர்கள் மற்றும் 50 தன்னார்வலர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.
100 பறவை வகைகள்
அதன்படி தொலைநோக்கு கருவி, கேமரா உள்ளிட்ட கருவிகளை பயன்படுத்தி பாம்புண்ணி கழுகு, சிறிய கரும் பருந்து, செந்நாரை, மீன்கொத்திகள், கடலை குயில், மஞ்சள் மூக்கு நாரை உள்ளிட்ட 100-க்கும் அதிகமான பறவை வகைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை உரிய படிவத்தில் பதிவு செய்யப்பட்டன.
கணக்கெடுப்பு பணியின்போது டி.வி.எஸ். தொழிற்சாலை வளாகத்தில் அமைந்துள்ள நீர்நிலைகளில் மஞ்சள் மூக்குநாரை பறவை காணப்பட்டது. இந்த பறவை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முதல் ஜூன் மாதம் வரை இங்கு வந்து, பிப்ரவரி மாதத்தில் முட்டையிட்டு குஞ்சுகள் பொரித்து, பராமரித்து பிறகு செல்ல தொடங்கும். இந்த வகை பறவைகள் இங்கு கடந்த 20 ஆண்டுகளாக வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளன.
மேலும், அஞ்செட்டி அருகில் உள்ள பனை ஏரியில் பிளாக் ஸ்டார்க், அகலவாயன் உள்ளிட்ட அரிய வகை பறவையினங்களும், தளி அருகே உள்ள வண்ணம்மாள் ஏரியில் பாம்புண்னி கழுகு பறவையினங்கள் காணப்பட்டன. கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களுக்கு வனத்துறை சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.