இரை தேட குவியும் அரிய வகை பறவைகள்


இரை தேட குவியும் அரிய வகை பறவைகள்
x

அதிராம்பட்டினம் அலையாத்திக்காட்டில் இரை தேடுவதற்காக அரிய வகை பறவைகள் குவிந்து வருகின்றன.

தஞ்சாவூர்

அதிராம்பட்டினம் அலையாத்திக்காட்டில் இரை தேடுவதற்காக அரிய வகை பறவைகள் குவிந்து வருகின்றன.

அலையாத்திக்காடு

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதி கடலோர பகுதியாகும். இங்கு கடற்கரையையொட்டி அலையாத்திக்காடு உள்ளது. சுனாமி, புயல் போன்ற இயற்கை சீற்றங்களின்போது கடலில் எழும்பும் ராட்சத அலையின் தாக்கத்தில் இருந்து கடலோர கிராமங்களை பாதுகாக்கும் இயற்கை பேரணனாக அலையாத்திக்காடு திகழ்கிறது.

காட்டில் உள்ள அலையாத்தி மரங்களில் இருந்து உதிர்ந்து விழும் இலைகள் மக்கி கடலில் கலந்து இறால், மீன்கள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்களுக்கு உணவாகிறது.

அரியவகை பறவைகள்

அலையாத்திக்காட்டில் காட்டுப்பன்றி, காட்டுப்பூனை, நரி உள்ளிட்ட வன விலங்குகள் ஏராளம் வசிக்கின்றன. கொடிய விஷப்பாம்புகளும் இங்கு உண்டு. அதேபோல அரிய வகை பறவைகளையும் இங்கு காணலாம்.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழை பெய்யும். இந்த பருவமழை காலத்தில் அலையாத்திக்காட்டில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் தேங்கி காணப்படும். மேலும் இங்கு கடும் குளிர் நிலவும். இது பறவைகளுக்கு ஏற்ற சூழல் என்பதால் இலங்கை, மலேசியா, இந்தோனேசியா, மியான்மர், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பூநாரை, கூளக்கிடா, செங்கால்நாரை, நீர்க்காகம், ஊசிவால் வாத்து, வெண்கொக்கு, கொளத்துக்கொக்கு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட வகை பறவைகள் அலையாத்திக்காட்டில் முகாமிடுவது வழக்கம்.

கோடை மழை

இவ்வாறு வரும் பறவைகள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து மீண்டும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் தங்கள் தாயகத்துக்கு திரும்பி செல்லும். இந்த நிலையில் சமீபத்தில் அதிராம்பட்டினம் கடல் பகுதியில் கோடை மழை பெய்தது. தொடர்ந்து பெய்த கோடை மழையால் கடற்கரை ஓரத்தில் உள்ள பாத்திகளில் ஓரளவு தண்ணீர் தேங்கி நிற்கின்றது. இந்த பாத்திகளில் தேங்கி நிற்கும் தண்ணீரில் உள்ள புழு, பூச்சி உள்ளிட்டவற்றை திண்பதற்காக பூநாரை, கூளக்கிடா, செங்கால்நாரை, நீர்க்காகம் மற்றும் பல்வேறு அரிய வகை பறவைகள் அதிராம்பட்டினம் அலையாத்திக்காட்டில் தற்போது முகாமிட்டுள்ளன. பறவைகள் இரை தேடும் அழகை ரசிக்க அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.


Next Story