கூப்பாச்சிக்கோட்டை ஏரியில் குவியும் பறவைகள் சரணாலயமாக மாற்ற இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை


கூப்பாச்சிக்கோட்டை ஏரியில் குவியும் பறவைகள்   சரணாலயமாக மாற்ற இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 15 Nov 2022 12:15 AM IST (Updated: 15 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடி அருகே கூப்பாச்சிக்கோட்டை ஏரியில் பறவைகள் குவிந்து வருவதால், அந்த பகுதியை சரணாலயமாக மாற்ற வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

மன்னார்குடி அருகே கூப்பாச்சிக்கோட்டை ஏரியில் பறவைகள் குவிந்து வருவதால், அந்த பகுதியை சரணாலயமாக மாற்ற வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூப்பாச்சிக்கோட்டை ஏரி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கூப்பாச்சிக்கோட்டையில் ஏரி உள்ளது. பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி, மன்னார்குடி- மதுக்கூர் நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ளது. இது திருவாரூர் மாவட்டத்தில் வடுவூர் ஏரிக்கு அடுத்த பெரிய ஏரியாகும். 40 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் நீர் நிரம்பி இருக்கும்போது கடல்போல் காட்சி அளிக்கும். இந்த ஏரியில் இருந்து 250 எக்டேருக்கு மேல் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மன்னார்குடியில் இருந்து 9 கி.மீ. தூரத்தில் இந்த ஏரி அமைந்துள்ளது. ஏரியின் ஆழத்தை அதிகப்படுத்தி, கரைகளை அகலப்படுத்தினால் இதை மிகப்பெரிய பறவைகள் சரணாலயமாக மாற்றலாம் என இயற்கை ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

சரணாலயமாக மாற்ற...

கூப்பாச்சிக்கோட்டை ஏரிக்கு கொக்கு, நீர் காகம், சிறவி, வெள்ளை மூக்கு வாத்துகள், சாம்பல் நாரை, செங்கால் நாரை உள்ளிட்ட பல விதமான பறவைகள் வந்து செல்கின்றன. ஏரியின் நடுவில் திட்டுகள் அமைத்து பறவைகள் தங்கும் வகையில் மரங்களை வளர்த்து, பறவைகள் சரணாலயமாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சரணாலயம் மூலமாக இப்பகுதியில் வன உயிரின சூழல் மேம்படுவதோடு, சுற்றுலா பயணிகளும் அதிக எண்ணிக்கையில் வருவார்கள். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகிறார்கள்.

இது குறித்து கூப்பாச்சிக்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் பொன்முடி கூறியதாவது:-

ஆக்கிரமிப்புகள்

கூப்பாச்சிக்கோட்டை ஏரியை முறையாக அளந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு, நான்குபுறமும் கரைகளை அகலப்படுத்தி சாலை அமைக்க வேண்டும். கரைகள் அமைத்தது போக மீதமுள்ள மண்ணை ஏரியின் உள்ளே பறவைகள் தங்க திட்டுகள் அமைத்து பறவைகள் சரணாலயம் அமைக்கலாம்.

மேலும் நான்கு கரைகளில் சாலை அமைத்தால் நடைபயிற்சி மேற்கொள்ளவும் வசதியாக அமையும். மேலும் ஏரியின் நடுவில் சமுதாய ஆழ்குழாய்கிணறு அமைத்தால் சம்பா பருவம் மட்டுமன்றி 3 போகமும் நெல் சாகுபடி செய்யலாம். இதுகுறித்து அரசு அதிகாரிகள் பரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story