அனைத்துப் பணிகளுக்கும் பிறப்பு-இறப்பு சான்றிதழ் கட்டாயம் ஆகிறது; பொதுமக்கள் கருத்து


அனைத்துப் பணிகளுக்கும் பிறப்பு-இறப்பு சான்றிதழ் கட்டாயம் ஆகிறது; பொதுமக்கள் கருத்து
x

அனைத்துப் பணிகளுக்கும் பிறப்பு-இறப்பு சான்றிதழ் கட்டாயம் ஆக உள்ளது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல்

பிறப்பு, இறப்பு நிகழ்வுகளை அவை நடந்த உடன் பதிவு செய்ய வேண்டும் என்பது அரசின் சட்டம். இது ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறது.

குழந்தைகளைப் பள்ளிக்கூடங்களில் சேர்க்க, வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் சேர்க்க, மத்திய-மாநில அரசுப் பணிகளில் சேர, திருமணத்தை பதிவு செய்ய, டிரைவிங் லைசென்சு மற்றும் பாஸ்போர்ட் வாங்க மற்றும் இதுபோன்ற அனைத்துப் பணிகளுக்கும் பிறப்பு சான்றிதழை கட்டாயம் ஆக்குவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு எடுத்துள்ளது.

சட்டத்திருத்தம்

அதற்காக, பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டம் 1969-ல் திருத்தம் செய்ய உள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் நடைபெறுகிறது. அந்த கூட்டத்தொடரில், அதற்கான சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவு செய்யப்படுவதை வைத்து, ஒருங்கிணைந்த தரவுகள் சேமிக்கும் தளம் உருவாக்கப்படும்.

அதில், மனித தலையீடுகள் இல்லாமல் 18 வயது பூர்த்தியான உடன் வாக்காளர் அடையாள அட்டையில் தானாகவே பெயர் சேர்க்கப்பட்டு விடும்.

அதேபோல் இறந்தவர்களின் பெயர்கள், இறப்புச் சான்றிதழ்கள் பதிவு செய்யப்பட்ட உடன் தானாக நீக்கப்பட்டுவிடும்.

அதற்காக ஆஸ்பத்திரிகளில் இறப்பு சான்றிதழ்களை கட்டாயம் ஆக்குவதையும், உள்ளூர் பதிவாளரிடம் சமர்ப்பிக்கும் போது இறப்புக்கான காரணத்தைக் குறிப்பிடுவதும் கட்டாயமாக்கப்பட உள்ளது.

மேலும் அந்த மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னர் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் ஆன்லைன் முறையில் வழங்கப்படும். அதே நேரத்தில் இந்த தகவல்களை தேசிய மக்கள் தொகை பதிவேட்டிலும் பதிவு செய்ய மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது.

பிறப்பு, இறப்புகளை பதிவிடும் முறை தற்போது நடைமுறையில் இருந்தாலும், சான்றிதழ்களை கட்டாயமாக பதிவு செய்யவேண்டும் என்ற மத்திய அரசின் முன்மொழிவு சாத்தியமா? என்பது குறித்து திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்த கருத்து விவரம் வருமாறு:-

எளிமையாக்க வேண்டும்

விவசாய சங்க செயலாளர் ஜெயபிரகாஷ் (நிலக்கோட்டை):- பிறப்பு சான்றிதழ் இல்லாத இளைஞர்கள் பலர் உள்ளனர். திடீரென பிறப்பு சான்றிதழ் கட்டாயம் என்று சட்டம் கொண்டு வந்தால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள். பிறப்பு சான்றிதழ் இல்லாதவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். இதேபோல் பிறப்பு சான்றிதழ் பெறுதல், திருத்தம் செய்தல் போன்றவற்றில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. அதை எளிமைபடுத்த வேண்டும். அதன் பின்னரே சட்டத்தை கொண்டு வரவேண்டும். பிறப்பு சான்றிதழ் பெறுவதை எளிதாக்காமல் சட்டத்தை கொண்டு வந்தால் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

குடும்ப தலைவி ஈஸ்வரி (குள்ளனம்பட்டி):- இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான குழந்தைகளுக்கு, பெற்றோர் பிறப்பு சான்றிதழ் வாங்கி விடுகின்றனர். ஆனால் 20 ஆண்டுகளுக்கு முன்பு பிறப்பு சான்றிதழ் வாங்கும் விழிப்புணர்வு பலருக்கு இருந்தது கிடையாது. அவ்வாறு பிறப்பு சான்றிதழ் இல்லாதவர்களுக்கு, கல்வி சான்றிதழை பிறப்பு சான்றாக எடுத்து கொள்ள வேண்டும். இதுவரை பிறப்பு சான்றிதழ் பெறாத நபர்கள் பாதிக்கப்படாத வகையில் வாய்ப்பு வழங்க வேண்டும்.

மோசடிகள் குறையும்

நகை மதிப்பீட்டாளர் சதீஷ்குமார் (நிலக்கோட்டை):- கிராமப்புற மக்கள் பிறப்பு சான்றிதழ் பெறுவதில் பல்வேறு சிரமம் இருக்கிறது. எனவே பிறப்பு சான்றிதழ் வழங்கும் முறையை எளிமைப்படுத்த வேண்டும். கிராம நிர்வாக அலுவலகத்தில் பிறப்பு சான்றிதழ் வழங்கினால் நன்றாக இருக்கும். மேலும் மத்திய அரசு கொண்டு வரும் புதிய சட்டத்தால் பிறப்பு சான்றிதழ் இல்லாதவர்கள் அரசு சலுகைகளை இழக்க நேரிடும். எனவே பிறப்பு சான்றிதழ் இல்லாதவர்களுக்கு கல்வி சான்றிதழை பிறப்பு சான்றாக எடுத்து கொள்ள வேண்டும்.

சமூக ஆர்வலர் முஜிப்ரகுமான் (தொட்டணம்பட்டி):- அரசின் சலுகைகளை யாரும் தவறாக பெற்றுவிடக்கூடாது. தகுதி உள்ள நபர்களுக்கு மட்டுமே சலுகைகள் கிடைக்க வேண்டும். எனவே அரசின் திட்டங்களில் பயன்பெறுவதற்கு பிறப்பு சான்றிதழ் அவசியம் என்பது வரவேற்கத்தக்கது. பிறப்பு சான்றிதழ் இருந்தால் மட்டுமே ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட் பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டால் மோசடிகள் குறையும். அதேநேரம் மக்களை பாதிக்காத வகையில் செயல்படுத்த வேண்டும்.

எலெக்ட்ரீசியன் கண்ணன் (எரியோடு):- பல்வேறு மோசடிகள், முறைகேடுகளை தடுத்தால் தகுதியான நபர்களுக்கு அரசின் திட்டங்கள் சென்றடையும். இதற்காக பிறப்பு சான்றிதழ் கட்டாயம் எனும் சட்டத்தை கொண்டு வருவது நல்லது தான். இதனால் மோசடி நபர்களை தடுக்க முடியும். அதேநேரம் பிறப்பு சான்றிதழ் இல்லாத நபர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story