பாப்பாரப்பட்டியில் தியாகி சுப்பிரமணிய சிவா பிறந்த நாள் விழா-மணிமண்டபத்தில் கலெக்டர் மரியாதை
தர்மபுரி:
பாப்பாரப்பட்டியில் தியாகி சுப்பிரமணிய சிவா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது மணிமண்டபத்தில் கலெக்டர் சாந்தி மற்றும் எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
தியாகி சுப்பிரமணிய சிவா
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் தமிழக அரசின் சார்பில் சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவாவின் 139-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அங்குள்ள சுப்பிரமணிய சிவாவின் மணிமண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி, அவரது உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து டாக்டர் செந்தில்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, கே.பி.அன்பழகன், கோவிந்தசாமி, சம்பத்குமார், வெங்கடேஸ்வரன், முன்னாள் எம்.எல்.ஏ. தடங்கம் சுப்பிரமணி, மாவட்ட பால்வள தலைவர் டி.ஆர்.அன்பழகன் ஆகியோரும் தியாகி சுப்பிரமணிய சிவாவின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் தியாகி சுப்பிரமணிய சிவா நினைவிடத்திலும், மணிமண்டப வளாகத்தில் அமைந்துள்ள பாரதமாதா நினைவாலயத்திலும் கலெக்டர், எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
வண்ண மலர்கள் அலங்காரம்
இந்த விழாவில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் விழாவையொட்டி தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபம், பாரதமாதா நினைவாலயம், நூலக கட்டிடம், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் தமிழறிஞர்களின் புகைப்பட கண்காட்சி அரங்க கட்டிடம் உள்ளிட்டவை வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
மேலும், மணிமண்டபத்திலுள்ள தியாகி சுப்பிரமணிய சிவா நினைவிடம், நினைவுத்தூண் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கவிதா, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் குட்டி, ஒன்றியக் குழு உறுப்பினர் பூங்கொடி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணை தலைவர் வேலுமணி, பாப்பாரப்பட்டி பேரூராட்சி தலைவர் பிருந்தா, ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஜெயக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு இமயவரம்பன், தாசில்தார் அசோக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் வடிவேலன், பேரூராட்சி செயல் அலுவலர் கோமதி, ஊராட்சி செயலர் சண்முகம் மற்றும் அரசு அலுவலர்கள், கூட்டுறவாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.