உடன்குடி அருகே பிரியாணி கடை சூறை:உரிமையாளர் உள்பட 2 பேருக்கு அரிவாள் வெட்டு


தினத்தந்தி 22 Jun 2023 12:15 AM IST (Updated: 22 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

உடன்குடி அருகே பிரியாணி கடை சூறையாடப்பட்டதுடன், உரிமையாளர் உள்பட 2 பேரை அரிவாளால் வெட்டிய ஐந்து பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

உடன்குடி அருகே பிரியாணி கடையை அடித்து நொறுக்கி சூறையாடியதுடன், உரிமையாளர் உள்பட 2 பேரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்ற 5 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

பிரியாணி கடை சூறை

உடன்குடி அருகேயுள்ள கொட்டங்காடு லெட்சுமிபுரத்தை சேர்ந்த முத்துமணி மகன் முத்துச்செல்வன் (வயது 26). இவரது உறவினரான கீழலட்சுமிபுரத்தை சேர்ந்த கண்ணன், முத்துராஜ் ஆகியோர் நடத்தி வரும் பிரியாணி கடையில் வேலைபார்த்து வருகிறார். கடந்த 15-ந்தேதி இரவு 5 பேர் சாப்பிட வந்துள்ளனர். சாப்பிட்டு விட்டு பணம் கொடுத்து விட்டுச் சென்றவர்கள் மீண்டும் சிறிது நேரத்தில் அந்த கடைக்கு வந்தனர். திடீரென்று தாங்கள் அணிந்திருந்த உடையை கேலி, கிண்டல் செய்ததாக கூறி கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் தகராறு ெசய்தனர். இதை மறுத்ததை ஏற்காமல் 5 பேரும் பிரியாணி கடையிலிருந்து நாற்காலிகள், பாத்திரங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கினர். விற்பனைக்கு வைத்திருந்த பிரியாணி மற்றும் உணவு பொருட்களையும் கீழே கொட்டி சூறையாடியுள்ளனர்.

2 பேருக்கு அரிவாள் வெட்டு

இதை தடுக்க முயன்ற கண்ணன(31)், முத்துசெல்வனை அந்த கும்பல் அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடி விட்டனர்.

அக்கம் பக்கத்தினர் ரத்தவெள்ளத்தில் கிடந்த 2 பேரையும் மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

5 பேர் கும்பலுக்கு வலைவீச்சு

இதில், பிரியாணி கடையை அடித்து நொறுக்கி சேதப்படுத்திவிட்டு, 2 பேரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியவர்கள், செய்துங்கநல்லூர் முத்தாலங்குறிச்சி நல்லதம்பி மகன் வண்ணமுத்து, செல்லப்பாண்டி மகன் பெரியவண்டி மலையான் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் என தெரியவந்தது. இந்த 5 பேர் கும்பலை குலசேகரன்பட்டினம் போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story