கொடைக்கானலில் உலா வந்த காட்டெருமை
கொடைக்கானலில், காட்டெருமை உலா வந்ததால் சுற்றுலா பயணிகள் ஓட்டம் பிடித்தனர்.
கொடைக்கானல் வனப்பகுதியில் இருந்து நகர்ப்பகுதிக்குள் காட்டெருமைகள் புகுந்து பொதுமக்களையும், சுற்றுலா பயணிகளையும் அச்சுறுத்தி வருவது வாடிக்கையாகி விட்டது. இதேபோல் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன.
இந்தநிலையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கொடைக்கானல் நகராட்சி அலுவலகம் எதிரே நேற்று காலை காட்டெருமை ஒன்று உலா வந்தது. இதனைக்கண்ட சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் ஓட்டம் பிடித்தனர். மேலும் வலம் வந்த காட்டெருமையால், சிறிதுநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சுமார் ½ மணி நேரத்துக்கும் மேலாக சுற்றித்திரிந்த காட்டெருமை தாமாகவே அருகே உள்ள தனியார் தோட்டத்துக்குள் சென்று விட்டது. அதன்பிறகே சுற்றுலா பயணிகள் நிம்மதி அடைந்தனர். கொடைக்கானல் நகர் பகுதிக்குள் காட்டெருமை புகுவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.