பா.ஜ.க. பிரமுகர்கள் 3 பேர் முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு
அமைச்சர் கார் மீது செருப்பு வீசிய வழக்கில் பா.ஜ.க. பிரமுகர்கள் 3 பேர் முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை திருமங்கலம் டி.புதுப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன், காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் வீர மரணம் அடைந்தார். அவரது உடல் விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது லட்சுமணனின் உடலுக்கு அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்தினார்.
அதே நேரத்தில் பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலையும் அங்கு வந்திருந்தார். இதனால் பா.ஜ.க. தொண்டர்கள் ஏராளமானோர் விமானநிலைய பகுதியில் திரண்டு இருந்தனர். அங்கிருந்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காரில் சென்றபோது, அவரது காரில் செருப்பு வீசினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பல்வேறு நபர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. பெண்கள் உள்பட 10 பேர் கைதாகினர். இந்தநிலையில் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு உள்ள பா.ஜ.க. பிரமுகர்கள் மானகிரி கோகுல் அஜித், விளாங்குடி வேங்கைமாறன், மேல அனுப்பானடி மணிகண்டன் ஆகியோர் தங்களுக்கு முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது.