பா.ஜ.க. நிர்வாகி வேலூர் இப்ராஹிம் கைது
பா.ஜ.க. நிர்வாகி வேலூர் இப்ராஹிம் கைது செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் நடைபெற்ற பா.ஜ.க. ஒன்றிய செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின். சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கலந்து கொண்டார். இதைதொடர்ந்து கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த சிறுபான்மையினர் பிரிவு மாவட்ட பொதுச் செயலாளர் சலீம் அம்ஜத்தை அவருடைய இல்லத்திற்கு சென்று சந்திப்பதற்கு அறந்தாங்கி பயணியர் மாளிகையில் இருந்து புறப்பட்டு சென்றார். இவரது வருகைக்கு கோட்டைப்பட்டினம் ஊர் ஜமாஅத் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவிக்க இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் அவர் கோட்டைப்பட்டினம் செல்வதை தவிர்க்குமாறு வேலூர் இப்ராஹிமிடம் போலீசார் தெரிவித்தனர். அதையும் மீறி அவர் கோட்டைப்பட்டினம் செல்வதாக தெரிவித்தார். இதையடுத்து அவருடன் வந்த கட்சி நிர்வாகிகளையும் அங்கு செல்ல வேண்டாம் என்று போலீசார் கூறினர். இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு தினேஷ்குமார் உள்ளிட்ட போலீசார் இப்ராஹிம் மற்றும் அவருடன் வந்த 22 பேரை கைது செய்து, அரசு பயணியர் மாளிகையில் தங்க வைத்தனர். பின்னர் அனைவரும் இரவு விடுவிக்கப்பட்டனர். இந்த கைது நடவடிக்கையை கண்டித்து அறந்தாங்கி அரசு பயணியர் மாளிகையில் பா.ஜ.க.வினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.