கிராமசபை கூட்டத்துக்கு கருப்பு கொடியுடன் வந்த பா.ஜ.க.வினர்
வாய்விடாந்தாங்கல் கிராமசபை கூட்டத்துக்கு பா.ஜ.க.வினர் கருப்பு கொடியுடன் வந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாய்விடாந்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் இளவரசி. இவர் திருவண்ணாமலையில் வசித்து வருவதாக அக்கிராம மக்கள் தரப்பில் கூறப்படுகிறது. வாய்விடாந்தாங்கல் கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவுநீர் கால்வாய், மின்விளக்குகள் உள்ளிட்டவைகளை செய்து தரவில்லை என பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
கிராமத்திற்கு குடிநீர் வினியோகம் செய்யும் குடிநீர் தொட்டி மூடாமல் உள்ளதால் குரங்குகள் தண்ணீரில் விளையாடி துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.இதுகுறித்து பொதுமக்கள் சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம், 100 நாள் வேலை திட்டம் உள்ளிட்டவைகளில் வெளியூர்களில் வசித்து வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், முறைகேடுகள் நடைபெறுவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் நேற்று வாய்விடாந்தாங்கல் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடக்க இருந்தது. அப்போது ஊராட்சி மன்ற தலைவர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் திருவண்ணாமலையில் வசித்து வருவதாக கூறி அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. நிர்வாகிகள் கருப்பு கொடி ஏந்தி கூட்டத்திற்கு வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கருப்பு கொடி ஏந்த வந்ததால் கூட்டம் தொடங்கவில்லை. அதைத்தொடர்ந்து புதுப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முன்னிலையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.