பா.ஜ.க. நிர்வாகிகள் மோதல்; 3 பேர் காயம்


பா.ஜ.க. நிர்வாகிகள் மோதல்; 3 பேர் காயம்
x

தேனியில் முன்விரோதத்தில் பா.ஜ.க. நிர்வாகிகள் மோதலில் ஈடுபட்டதில் 3 பேர் காயம் அடைந்தனர். 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தேனி

பா.ஜ.க. நிர்வாகிகள்

தேனி பாரஸ்ட்ரோடு 1-வது தெருவை சேர்ந்தவர் மதிவாணன் (வயது 34). இவர், பா.ஜ.க. தேனி நகர தலைவராக உள்ளார். தேனி அன்னப்பராஜா திருமண மண்டப தெருவை சேர்ந்தவர் பெரியசாமி (40). இவர், பா.ஜ.க. தேனி நகர துணைத்தலைவராக உள்ளார்.

இவர்கள் 2 பேரும் உறவினர்கள். இவர்களுக்கு இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பாரஸ்ட்ரோட்டில் உள்ள ஒரு ஜெராக்ஸ் கடை முன்பு இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர்களுக்கு இடையே மோதல் உருவானது.

3 பேர் காயம்

இதில், சுத்தியலால் தாக்கியதில் பெரியசாமிக்கு தலையில் காயம் ஏற்பட்டது. மேலும் இந்த மோதலில் மதிவாணன், அவருடைய தந்தை கருப்பையா ஆகியோரும் காயம் அடைந்தனர். காயம் அடைந்த 3 பேரும் தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். தகவல் அறிந்து தேனி போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் இது தொடர்பாக இருதரப்பிலும் போலீசாரிடம் புகார் கொடுத்தனர். மதிவாணன் கொடுத்த புகாரின் பேரில், பெரியசாமி, அவருடைய நண்பர் வினோத்குமார் ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பெரியசாமி கொடுத்த புகாரின் பேரில், மதிவாணன், அவருடைய தந்தை கருப்பையா, தம்பி பிரபாகரன் உள்பட 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்சினையில் ஏற்பட்ட முன்விரோதத்தில் பா.ஜ.க. நிர்வாகிகள் மோதலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story