பா.ஜனதா கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
பொன்மனை பேரூராட்சி அலுவலகத்தில் பா.ஜனதா கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குலசேகரம்:
பொன்மனை பேரூராட்சி அலுவலகத்தில் பா.ஜனதா கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பா.ஜனதா கவுன்சிலர்கள் போராட்டம்
பொன்மனை பேரூராட்சிக்குட்பட்ட பொன்மனை முள்ளம்வாளி பகுதியில் தனியார் மதுக்கூடம் (பார்) அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே அனைத்து அரசியல் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றது. பொன்மனை பேரூராட்சி அவரசக்கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்தில் தனியார் மதுக்கூடத்திற்கு அனுமதியில்லை என பேரூராட்சி தலைவர் உள்பட கவுன்சிலர்கள் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது, கூட்டம் முடிந்தவுடன் பா.ஜனதா உறுப்பினர்கள் 4 பேர் பேரூராட்சி துணைத்தலைவர் அருள்மொழி தலைமையில், தனியார் மதுக்கூடம் அமைக்க முயற்சிகள் நடைபெற்று வரும் கட்டிடத்தை சீல் வைக்க வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இதையடுத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் குலசேகரம் வருவாய் ஆய்வாளர் ரவிநாத், குலசேகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் இந்த பிரச்சினையை மாவட்ட கலெக்டர் மற்றும் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் போராட்டதை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும், போராட்டம் காரணமாக பேரூராட்சி அலுவலகத்தின் முன்பு திரண்டிருந்த பா.ஜனதாவினரும் கலைந்து சென்றனர்.