பா.ஜ.க. பெண் நிர்வாகிக்கு கொலை மிரட்டல்: கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க சூர்யா சிவாவுக்கு தடை
பா.ஜ.க. பெண் நிர்வாகி டெய்சி சரணிடம் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த சூர்யா சிவா, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை விதித்து மாநிலத்தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
தமிழக பா.ஜ.க.வின் சிறுபான்மையினர் அணி தலைவராக இருப்பவர் டெய்சி சரண். இதேபோன்று தமிழக பா.ஜ.க.வின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச்செயலாளராக இருப்பவர் திருச்சி சூர்யா சிவா. இவர் தி.மு.க. எம்.பி. திருச்சி சிவாவின் மகன் ஆவார்.
டெய்சி சரணும், சூர்யா சிவாவும் தொலைபேசியில் பேசிக்கொள்வது போன்ற ஆடியோ ஒன்று வெளியாகியது.
அதில் டெய்சி சரணை, மிகவும் தரம் தாழ்ந்து சூர்யா சிவா ஆபாசமாக பேசுவது போன்றும், கொலை மிரட்டல் விடுப்பது போன்றும் உரையாடல் இருந்தது. இது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஆடியோவை கேட்ட பா.ஜ.க.வினரே, சூர்யா சிவாவின் கடும் சொற்கள் உள்ளடங்கிய பேச்சை கேட்டு முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டது. இந்த விவகாரத்தை விசாரித்து, அறிக்கை சமர்பிக்க தமிழக பா.ஜ.க. உத்தரவிட்டுள்ளது.
அண்ணாமலை நடவடிக்கை
இதுதொடர்பாக தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழக பா.ஜ.க.வின் சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரண், இதர பிற்படுத்தப்பட்டோர் அணி மாநில பொதுச்செயலாளர் சூர்யா சிவா ஆகியோர் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் ஒன்று இன்று (நேற்று) காலை என் கவனத்துக்கு வந்தது. இந்த சம்பவத்தை விசாரித்து கட்சி தலைமைக்கு அடுத்த 7 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.வின் மாநில துணை தலைவரும், ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தலைவருமான கனக சபாபதியிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஒழுங்கு நடவடிக்கை குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை சூர்யா சிவா கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என்று அறிவுறுத்துகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
யூடியூப் சேனல்கள்...
இதேபோல் அண்ணாமலை வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நமது கருத்துகளை முன்னெடுத்து வைப்பதற்கு யூடியூப் சேனல்களும் பெரிதளவில் உதவுகிறது என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் இவ்வாறு யூடியூப் சேனல்களுக்கு நேர்காணல் வழங்கி வரும் சிலர் கட்சியின் நிலைப்பாடுகளை விடுத்து தங்களது சொந்த கருத்துகளை முன்னிறுத்தி வருகிறார்கள்.
கூட்டணி கட்சியை பற்றியும், கூட்டணி கட்சி தலைவர்களை பற்றியும் யூடியூப் சேனல்களில் கட்சியில் சிலர் முன்வைக்கும் விமர்சனங்கள் கட்சியின் நிலைப்பாடாக மாறுவது ஏற்புடையது அல்ல. அந்த காணொலியை காணும் மக்களுக்கு இது பா.ஜ.க.வின் அதிகாரபூர்வமான கருத்து மற்றும் நமது கட்சியின் எண்ண ஓட்டம் இதுதான் என்பது போன்ற தவறான பிம்பத்தை மக்களிடம் எடுத்துச்சென்று விடுகிறது.
கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித்தொடர்பாளர்களை தவிர்த்து மற்றவர்கள் யூடியூப் சேனல்களுக்கு நேர்காணல்கள் வழங்க விருப்பப்பட்டால் அதை நமது மாநில ஊடக பிரிவின் தலைவர் ரங்கநாயக்கலுவுக்கு தெரியப்படுத்துங்கள். இனி வரும் காலங்களில் கட்சியில் ஒப்புதல் பெற்ற பின்பே நீங்கள் நேர்காணல்கள் வழங்க வேண்டும். கட்சி கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.