பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூரில் பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சி. வாசுதேவன் தலைமை தாங்கினார். நகரத் தலைவர் பி.சண்முகம் வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் வக்கீல் அன்பழகன், பொதுச் செயலாளர்கள் ஈஸ்வர், கண்ணன், தண்டாயுதபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறுபான்மைப் பிரிவு தேசியச் செயலாளர் வேலூர் இப்ராஹிம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது தி.மு.க. அரசு தமிழ்நாட்டில் தமிழுக்கு மூடு விழா செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசு கல்விக் கொள்கைப்படி ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழி கட்டாயம் என்று கூறப்பட்டிருக்கிறது. 6-ம் வகுப்பு முதல் மூன்றாவது மொழியாக தாய் மொழியை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. பல்வேறு இந்தி பேசும் மாநிலங்களில் பொறியியல் மற்றும் மருத்துவம் இந்தி மொழியில் கற்பிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பொறியியல் மற்றும் மருத்துவம் தமிழில் கற்பிக்க தி.மு.க. அரசால் நடவடிக்கை எடுக்கமுடியவில்லை என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் நாட்டறம்பள்ளி ஒன்றிய கவுன்சிலர் குருசேவ், மாநில செயற்குழு உறுப்பினர் ஸ்டாலின் ராஜேஷ்குமார், மாவட்ட தொழில் பிரிவு தலைவர் பிரேம்குமார், ஒன்றிய கவுன்சிலர் கே.ஜி. பூபதி, இளைஞர் அணி தலைவர் எஸ்.விவேகானந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பார்த்திபன் நன்றி கூறினார்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த இப்ராஹிம், கோவை குண்டு வெடிப்பு குறித்து வைகோ, திருமாவளவன், முத்தரசன் உள்ளிட்ட எவருமே ஏன் கருத்து தெரிவிக்கவில்லை? என கேள்வி எழுப்பினார்.