பா.ஜ.க.-தி.மு.க. கொடிகள் அகற்றம்


பா.ஜ.க.-தி.மு.க. கொடிகள் அகற்றம்
x
தினத்தந்தி 11 Nov 2022 12:15 AM IST (Updated: 11 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை வரவேற்கும் வகையில் கட்டியிருந்த பா.ஜ.க.-தி.மு.க. கொடிகள் அகற்றப்பட்டன. இதனை கண்டித்து பா.ஜ.க.வினர் மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

பட்டமளிப்பு விழா


திண்டுக்கல் அருகே உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.


இதற்காக பிரதமர் மோடி, மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அம்பாத்துரை அருகே அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்குதளத்துக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலை வழியாக காந்திகிராமம் செல்கிறார்.


இதேபோல் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கரூரில் இருந்து கார் மூலம் அம்பாத்துரை ஹெலிகாப்டர் இறங்குதளத்துக்கு வருகிறார். பின்னர் அங்கு பிரதமர் மோடிக்கு வரவேற்பு கொடுத்துவிட்டு கார் மூலம் அவர் காந்திகிராமம் செல்கிறார்.


கட்சி கொடிகள் அகற்றம்


பிரதமர், முதல்-அமைச்சரை வரவேற்கும் வகையில் பா.ஜ.க. மற்றும் தி.மு.க.வினர் திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் வழிநெடுகிலும் தங்களது கட்சி கொடிகளை ஊன்றி வைத்தனர்.


இந்தநிலையில் அனுமதியின்றி கட்சி கொடிகளை கட்டியதாக கூறி, திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையிலான போலீசார் அந்த 2 கட்சிகளின் கொடிகளையும் அகற்றினர்.


இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த பா.ஜ.க., தி.மு.க.வினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில், பா.ஜ.க. தொண்டர் ஒருவர் உயர் போலீஸ் அதிகாரி ஒருவரை தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.


இதனையடுத்து போலீசாருக்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அம்பாத்துரை பகுதியில் பதற்றம் ஏற்பட்டு போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.


பா.ஜ.க.வினர் மறியல்


இதற்கிடையே அங்கிருந்து கலைந்து சென்ற பா.ஜ.க.வினர், காந்திகிராமம் பல்கலைக்கழக நுழைவு வாயிலுக்கு எதிரே வந்து திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். மேலும் போலீசாரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.


மறியல் எதிரொலியாக, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறத்திலும் ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.


இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். பின்னர் மறியலில் ஈடுப்பட்ட பா.ஜ.க.வினருடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பா.ஜ.க.வினர் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.



Next Story