பா.ஜ.க.-தி.மு.க. கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதம்


பா.ஜ.க.-தி.மு.க. கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதம்
x

திண்டுக்கல் பஸ்நிலையத்தில் கடைகளை ஏலம் விட்டது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்திய பா.ஜ.க. கவுன்சிலருடன், தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மாநகராட்சி கூட்டம் பாதியிலேயே முடிவடைந்தது.

திண்டுக்கல்

மாநகராட்சி கூட்டம்

திண்டுக்கல் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம், மாநகராட்சி கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. இதற்கு மாநகராட்சி மேயர் இளமதி தலைமை தாங்கினார். துணை மேயர் ராஜப்பா, ஆணையர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், வார்டு பகுதிகளில் மேற்கொள்ளப்படவேண்டிய பணிகள் குறித்து மேயர், கவுன்சிலர்களிடையே விவாதம் நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு:-

பாஸ்கரன் (அ.தி.மு.க.) :- வார்டு பகுதிகளில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதில் பாகுபாடு உள்ளது. கவுன்சிலரின் கோரிக்கைக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. நீர்நிலைகள் தூர்வாரப்படாமல் உள்ளன. இதனால் மழைக்காலத்தில் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் சூழ்ந்துவிடுகிறது.

மேயர் இளமதி:- வளர்ச்சி பணிகளை செயல்படுத்துவதில் அ.தி.மு.க. கவுன்சிலர் கூறுவது போல் பாகுபாடு பார்ப்பதில்லை. கவுன்சிலர்களின் கோரிக்கை அனைத்துக்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

ரூ.33 கோடி பற்றாக்குறை

மார்த்தாண்டன் (தி.மு.க.) :- அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் மாநகராட்சி பட்ஜெட்டில் ரூ.33 கோடி பற்றாக்குறை இருந்தது. அதை சரிசெய்யவே இன்னும் 6 மாதம் ஆகும். பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டதும் தான் வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்த முடியும்.

எதிர்க்கட்சி தலைவர் ராஜ்மோகன் (அ.தி.மு.க.) :- அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 10 ஆண்டுகளாக வளர்ச்சி பணிகள் எதுவும் நடக்காதது போல் சொல்கிறீர்கள். உங்கள் மனசாட்சிக்கு தெரியும் அ.தி.மு.க. என்ன செய்தது என்று. ஆர்.எம். காலனியில் உள்ள பூங்கா சீரமைக்கப்படாமல் உள்ளது. அதனை சீரமைக்க வேண்டும்.

ஆனந்த் (தி.மு.க.) :- மாநகராட்சி வார்டு பகுதி முழுவதும் தனியார் தண்ணீர் லாரிகள் மூலம் ஒரு குடம் ரூ.10, ரூ.12-க்கு குடிநீர் விற்கப்படுகிறது. மாநகராட்சியில் அனுமதி பெற்று குடிநீர் வழங்கப்பட்டாலும் அது சுத்தமானதாக இருக்கிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும்.

ஆணையர் சிவசுப்பிரமணியன்:- உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

குளம் போல் தேங்கும் தண்ணீர்

பாஸ்கரன்:- குள்ளனம்பட்டியில் வாய்க்கால் இருக்கும் இடம் ஆக்கிரமிக்கப்பட்டு வீடு கட்டப்பட்டுள்ளது.

மேயர்:- ஆக்கிரமிப்பாளர்களுக்கு வீடு கட்ட அனுமதி அளித்தது அ.தி.மு.க. ஆட்சியில் தான்.

துணை மேயர்:- ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜோதி பாசு (மா.கம்யூ.) :- திண்டுக்கல் ஒத்தக்கண் பாலம் பகுதியில் மழைக்காலத்தில் சாலையில் தண்ணீர் குளம்போல் தேங்குகிறது. போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே அப்பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும்.

ஏலம் விட்டதில் முறைகேடு

தனபால் (பா.ஜ.க.) :- திண்டுக்கல்லில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் காலை உணவு திட்டத்துக்கான தொடக்க விழாவுக்கு விழாமேடை, பந்தல், மைக்செட் அமைத்த வகையில் செலவு என ரூ.2 லட்சம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. ரூ.30 ஆயிரம் கூட ஆகாத செலவுக்கு ரூ.2 லட்சம் செலவு செய்ததை ஏற்க முடியாது. மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் திண்டுக்கல் பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்ட 34 கடைகளை ஏலம் விட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் வருகிறது. இது தொடர்பாக வெள்ளை அறிக்கையை, கடந்த கூட்டத்திலேயே கேட்டேன். தற்போதுவரை வழங்கப்படவில்லை.

உதவி வருவாய் அலுவலர் சரவணன்:- பஸ் நிலைய கடைகள் ஏலம் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டும், கோர்ட்டு வழிகாட்டுதல்படியும் நடந்தது. மேலும் ஏல நிகழ்வுகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. கவுன்சிலர் புகார் கூறும் ஏலதாரர் அரசு நிர்ணயித்த தொகையைவிட குறைவாக ஏலம் கேட்டார். அதனால் அவருக்கு கடை வழங்கப்படவில்லை.

தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதம்

உதவி வருவாய் அலுவலரின் பதிலால் திருப்தி அடையாத தனபாலன், வெள்ளை அறிக்கை வேண்டும் என தொடர்ந்து கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த மற்ற வார்டுகளை சேர்ந்த தி.மு.க. கவுன்சிலர்கள் தனபாலனிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மேயரும், துணை மேயரும் அமைதி காக்கும்படி அறிவுறுத்தியும் சலசலப்பு அடங்கவில்லை.

நேற்று நடந்த கூட்டத்தில் மொத்தம் 92 தீர்மானங்கள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டது. ஆனால் கவுன்சிலர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் எதிரொலியாக, 79 தீர்மானங்கள் மட்டுமே வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட நிலையில் கூட்டத்தை பாதியிலேயே நிறைவு செய்ததாக மேயர், துணை மேயர் ஆகியோர் அறிவித்து எழுந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story