பா.ஜனதா நிர்வாகி இரவில் நீக்கம், காலையில் கட்சியில் சேர்ப்பு


பா.ஜனதா நிர்வாகி இரவில் நீக்கம், காலையில் கட்சியில் சேர்ப்பு
x
தினத்தந்தி 17 March 2023 12:15 AM IST (Updated: 17 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்த விவகாரத்தில் பா.ஜனதா நிர்வாகி இரவில் நீக்கப்பட்டு, காலையில் கட்சியில் சேர்க்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

பா.ஜனதா மாநில தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார், மாநில செயலாளர் திலீப் கண்ணன் ஆகியோர் அக்கட்சியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். கூட்டணி தர்மத்தை மீறி செயல்பட்டதாக கூறி, கோவில்பட்டி இனாம் மணியாச்சி சந்திப்பில் கடந்த 7-ந் தேதி பா.ஜ.க. இளைஞர் அணி வடக்கு மாவட்ட தலைவர் தினேஷ் ரோடி தலைமையில் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ.க. வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னக்கேசவன் நேற்று முன்தினம் இரவு வெளியிட்ட அறிக்கையில், கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கு முரணாக செயல்பட்டதாலும், கட்சியின் நிலைப்பாட்டை மீறி தன்னிச்சையாக செயல்படுவதாலும் தினேஷ் ரோடி தற்போது வகித்து வரும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 6 மாத காலத்துக்கு விலக்கி வைக்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலையில் பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளரும், கன்னியாகுமரி பெருங்கோட்ட பொறுப்பாளருமான பொன் பாலகணபதி வெளியிட்டுள்ள அறிக்கையில், தினேஷ் ரோடி 6 மாத காலம் கட்சியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளதாக, வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னக்கேசவன் வெளியிட்ட அறிவிப்பானது உடனடியாக ரத்து செய்யப்படுகிறது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் பொறுப்பில் தினேஷ் ரோடி தொடர்ந்து செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story