பா.ஜ.க. பிரமுகர் கொலையில் தவறான கைது நடவடிக்கை: போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் ரூ.18 லட்சத்தை வசூலிக்க தடை - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
பா.ஜ.க. பிரமுகர் கொலை வழக்கில் தவறான கைது நடவடிக்கைக்காக ரூ.18 லட்சம் இழப்பீட்டுத்தொகையை போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் வசூலிக்கலாம் என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.
பா.ஜ.க. பிரமுகர் கொலை வழக்கில் தவறான கைது நடவடிக்கைக்காக ரூ.18 லட்சம் இழப்பீட்டுத்தொகையை போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் வசூலிக்கலாம் என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.
கொலை வழக்கில் கைது
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியைச் சேர்ந்த ராஜா முகமது, மனோகரன் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கில், கடந்த 2013-ம் ஆண்டில் பரமக்குடி நகர பா.ஜ.க. செயலாளர் முருகேசன் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து பரமக்குடி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்னகுமார் வழக்குபதிவு செய்து, எங்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தார். எங்கள் மீதும தேசிய பாதுகாப்புச்சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.
சி.பி.சி.ஐ.டி. விசாரணையில், இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகள் பக்ருதீன் என்ற போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், முகமது இஸ்மாயில் என்ற பன்னா இஸ்மாயில் ஆகியோர்தான் என்று கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் ஆனது. பின்னர் தவறாக கைது செய்யப்பட்டதாக கூறி எங்களை விடுவித்தனர்.எனவே கைது நடவடிக்கையில் ஈடுபட்ட போலீசார் மீதும், உயர் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுத்து, எங்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தனர்.
ரூ.18 லட்சம் இழப்பீடு
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, "கிரிமினல் வழக்கில் தவறான நடவடிக்கைக்கு ஆளானதற்காகவும், அவர்கள் அனுபவித்த துன்பங்களுக்காகவும் ராஜாமுகமதுவுக்கு ரூ.10 லட்சத்தையும், மனோகரனுக்கு ரூ.8 லட்சத்தையும் இழப்பீடாக 16 வாரத்தில் அரசு செலுத்த வேண்டும். இந்த தொகையை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்னகுமாரிடம் வசூலிக்கலாம"் என தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து இன்ஸ்பெக்டர் ரத்னகுமார், மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தார்.
ஏற்புடையதல்ல
இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இன்ஸ்பெக்டர் தரப்பில் மூத்த வக்கீல் அஜ்மல்கான், வக்கீல் சதீஷ்பாபு ஆகியோர் ஆஜராகி, பாதிக்கப்பட்டவர்கள் மீது குண்டர் சட்ட உத்தரவை பிறப்பித்தது மாவட்ட கலெக்டர்தான். மேலும் பல உத்தரவுகளை உயர் அதிகாரிகள்தான் பிறப்பித்துள்ளனர். அப்படி இருக்கும்போது இன்ஸ்பெக்டர் ரத்னகுமார் மட்டும் மொத்த இழப்பீட்டு தொகையையும் செலுத்தும்படி பிறப்பித்த உத்தரவு ஏற்புடையதல்ல என்று வாதாடினார்கள்.
இடைக்கால தடை
விசாரணை முடிவில், ரூ.18 லட்சத்தையும் இன்ஸ்பெக்டர் ரத்னகுமாரிடம் வசூலிக்கலாம் என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர்.