நகராட்சி தலைவர், கவுன்சிலர்கள் மீது போலீசில் பா.ஜ.க.புகார்
நகராட்சி தலைவர், கவுன்சிலர்கள் மீது போலீசில் பா.ஜ.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
ராமநாதபுரம் நகராட்சி கூட்டத்தில் பா.ஜ.க. கவுன்சிலர் குமாருக்கும், தி.மு.க. கவுன்சிலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து மாவட்ட பா.ஜ.க. தலைவர் தரணி முருகேசன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையிடம் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம் நகராட்சி 20-வது வார்டு பா.ஜ.க. கவுன்சிலர் குமார், நகராட்சி கூட்டத்தில் தலைவர் கார்மேகத்திடம் கேள்வி எழுப்பியதற்கு, தி.மு.க. கவுன்சிலர்கள் ஜகாங்கீர், ராமநாதன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணி செய்ய விடாமல் தடுத்தனர். அப்போது வெளியில் இருந்து வந்த நபர்களும் மிரட்டல் விடுத்துள்ளனர். அவர்கள் மீது நகராட்சி தலைவர் மற்றும் ஆணையாளர் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நகராட்சி தலைவர் மற்றும் தி.மு.க. கவுன்சிலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று கூறப்பட்டு உள்ளது.