அலைக்கற்றையை அடிமாட்டு விலைக்கு விற்று நாட்டிற்கு பாஜக அரசு செய்தது பச்சை துரோகம் - சீமான்
5ஜி அலைக்கற்றையை அடிமாட்டு விலைக்கு விற்று நாட்டிற்கு பாஜக அரசு செய்தது பச்சை துரோகம் என சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அதிவேக தொலைத்தொடர்பு சேவைக்கான 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக கடந்த ஜூலை 26-ந்தேதி முதல் ஆகஸ்டு 1-ந்தேதி வரை நடந்த ஏலத்தில் அடிப்படை மதிப்பீட்டு தொகையை விடப் பல மடங்கு குறைவான தொகையே பெறப்பட்டிருப்பது நாடெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
ரூ.4.3 லட்சம் கோடி அடிப்படை மதிப்பீட்டு தொகையாக அறிவிக்கப்பட்ட நிலையில், 40 சுற்றுகளாக 7 நாட்கள் நடைபெற்ற ஏலத்தில் இதுவரை 71 சதவீதம் வரை விற்கப்பட்டுவிட்ட போதிலும் வெறும் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்து 173 கோடி மட்டுமே கிடைத்திருப்பது அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மிகப்பெரும் ஊழலும், முறைகேடும் நடந்திருப்பதை உறுதிப்படுத்துகிறது.
அடிமாட்டு விலைக்கு அலைக்கற்றையை விற்று, அதனையும் தவணை முறையில் செலுத்தத் தனிப்பெரு முதலாளிகளுக்கு வாய்ப்பேற்படுத்தித் தந்திருப்பதன் மூலம் ரூ.3 லட்சம் கோடிக்கு மேல் நாட்டுக்குப் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இது நாட்டுக்கே பா.ஜ.க. அரசு செய்யும் பச்சை துரோகமாகும்.
இந்த முறைகேட்டை நாட்டு மக்கள் மத்தியில் எடுத்துரைத்து, பா.ஜ.க. ஆட்சியாளர்களின் முகத்திரையைக் கிழித்தெறிய அணிதிரள்வோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.