ஆரணி முன்னாள் ராணுவவீரர் கொலை வழக்கில் வேலூர் கோர்ட்டில் பா.ஜ.க. பிரமுகர் சரண்


ஆரணி முன்னாள் ராணுவவீரர் கொலை வழக்கில் வேலூர் கோர்ட்டில் பா.ஜ.க. பிரமுகர் சரண்
x

ஆரணி முன்னாள் ராணுவவீரர் கொலை வழக்கில் வேலூர் கோர்ட்டில் பா.ஜ.க. பிரமுகர் சரண் அடைந்தார்.

வேலூர்

ஆரணி முன்னாள் ராணுவவீரர் கொலை வழக்கில் வேலூர் கோர்ட்டில் பா.ஜ.க. பிரமுகர் சரண் அடைந்தார்.

ராணுவவீரர் கொலை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த மொழுகம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது 42), முன்னாள் ராணுவ வீரர். இவருடைய மனைவி ரேவதி. கணவன்-மனைவிக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதன்காரணமாக ரேவதி, குழந்தைகளுடன் ஒண்ணுபுரம் பகுதியில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்தார்.

வெற்றிவேல் கடந்த 4-ந் தேதி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து காயம் அடைந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவரை 5-ந் தேதி ரேவதி பார்க்க சென்றார். பின்னர் அன்றிரவு அவர் அங்கேயே தங்கினார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வெற்றிவேல் மர்மமான முறையில் இறந்தார்.

பா.ஜ.க. பிரமுகர் கோர்ட்டில் சரண்

இதுகுறித்து ஆரணி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், ரேவதி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ரேவதி கள்ளக்காதலன் நாகராஜ் உள்பட 2 பேருடன் சேர்ந்து வெற்றிவேலை கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், 2 பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் வெற்றிவேல் கொலை வழக்கு தொடர்பாக வேலூரை அடுத்த கம்மசமுத்திரம் அருகே உள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த வேலூர் மாவட்ட பட்டியல் அணி பா.ஜ.க. பொதுச்செயலாளர் ராஜேஷ் (33) வேலூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு (எண்-4) கோர்ட்டில் நேற்று சரணடைந்தார். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட்டு ரோஸ்மேரி உத்தரவிட்டார். அதையடுத்து ராஜேஷ் பலத்த போலீஸ் காவலுடன் வேனில் அழைத்து செல்லப்பட்டு வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.


Next Story