மக்கள் ஒற்றுமைக்கு எதிராக உள்ளது பா.ஜ.க. ஆட்சி
மக்கள் ஒற்றுமைக்கு எதிராக பா.ஜ.க. ஆட்சி உள்ளதாக கடலூரில் நடந்த கருத்தரங்கில் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
கருத்தரங்கம்
தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் 75-வது சுதந்திர தின விழாவையொட்டி கருத்தரங்கம் கடலூரில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அமர்நாத் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பஞ்சாச்சரம், சிவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாரதி புத்தகாலயம் கன்வீனர் ராஜேஷ்கண்ணன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், இந்துத்துவாவை அமலாக்க, மோடியும், அமித்ஷாவும் முயற்சிக்கின்றனர். தற்போது சில அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். பற்றி பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஒற்றுமைக்கு எதிராக....
ஆர்.எஸ்.எஸ். தலைமையகமான நாக்பூரில் இருந்து தான் மத்திய அரசு வழிநடத்தப்படுகிறது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் மக்கள் ஒற்றுமைக்கு எதிராக உள்ளது. அதனால் மக்கள் ஒற்றுமை மேடையை பரந்த அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்றார்.
இதில் தி.மு.க. மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் இள.புகழேந்தி, காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் திலகர், சி.பி.எம். மாவட்ட செயலாளர் மாதவன், காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் சந்திரசேகரன், சி.பி.ஐ. மாவட்ட துணை செயலாளர் குளோப், இந்திய முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் முகமது இஸ்மாயில், திராவிட கழகத்தின் மாவட்ட செயலாளர் சிவக்குமார், குடியிருப்போர் நல சங்கத்தின் பொதுச்செயலாளர் மருதவாணன், சி.பி.எம். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்புராயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மக்கள் ஒற்றுமை மேடை மாநகர அமைப்பாளர் பக்கீரான் நன்றி கூறினார்.